ஜப்பானில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் யோஷிஹைட் சுகா இந்தியாவிற்கும் பிலிப்பைன்ஸுக்கும் திட்டமிட்ட பயணத்தை ரத்து செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடல்களில் சீனாவின் வளர்ந்து வரும் ஆக்கிரமிப்புகளுக்கு மத்தியில், சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை மேம்படுத்துவதற்கான பிராந்திய பாதுகாப்பு குறித்து விவாதிக்க பிரதமர் சுகா இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகை தரவிருந்தார்.
தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடல்களில் ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்ற சீனா மேற்கொண்ட முயற்சிகளுக்கு மத்தியில், இந்த பகுதிகளில் உள்ள பிராந்திய நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த ஜப்பான் முயன்று வருகிறது.
அண்மையில், 200’க்கும் மேற்பட்ட சீனக் கப்பல்கள் தென் சீனக் கடலில் உள்ள பிலிப்பைன்ஸுக்கு சொந்தமான பகுதிக்குள் உள்ள விட்சன் பாறைகளை நோக்கி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
மோசமான வானிலையிலிருந்து பாதுகாக்கவே படகுகள் அங்கு தஞ்சமடைந்தன என்ற சீனாவின் கூற்றுக்கள் அப்பட்டமான பொய்கள் என்றும், மேற்கு பிலிப்பைன்ஸ் கடலில் சீனாவின் விரிவான மற்றும் சட்டவிரோத உரிமைகோரல்கள் பற்றிய தவறான கதையின் செயல்வடிவம் தான் இது என்றும் பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சகம் கூறியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த மாதம், ஜப்பான் மற்றும் இந்தோனேசியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் 2 + 2 வடிவத்தில் ஒரு கூட்டத்தை நடத்தி, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் நோக்கி பணியாற்றுவதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தென் சீனா மற்றும் கிழக்கு சீனா கடல்களில் புருனே, சீனா, ஜப்பான், மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் வியட்நாம் ஆகியவை அடங்கும். சீனா இப்பகுதியின் பெரும்பகுதியை தனக்குச் சொந்தம் என உரிமை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.