இடமாற்றம் செய்யப்பட்டதாக சர்ச்சைக்குள்ளாகியுள்ள சம்மாந்துறை பேருந்து சாலை விடயமாக பாராளுமன்ற பிரதமரின் அலுவலகத்தில் இன்று காலை பிரதமருடனான சந்திப்பின் போது அந்த சாலையின் தேவை, அந்த சாலையின் மூலம் மக்கள் அடையும் நன்மைகள், அந்த சாலையின் இடமாற்றத்தினால் அந்த மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் தொடர்பில் அங்கு கலந்து கொண்டிருந்த முஸ்லிம் எம்.பிக்கள் பிரதமருக்கு விளக்கியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
அந்த சந்திப்பின் பின்னர், சந்திப்பு தொடர்பில் ஊடகங்கள் கேள்வியெழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பில் கருத்துவெளியிட்ட அவர்,
அந்த சாலை விடயமாக போக்குவரத்து அமைச்சர், இராஜாங்க அமைச்சரை பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்து பேசியுள்ளோம். இது தொடர்பில் இன்று பிரதமருக்கு எடுத்துரைத்தவுடன் சம்மாந்துறை பிரதேசத்தை தான் தனிப்பட்டமுறையில் நன்றாக தெரிந்து வைத்திருப்பதாக தெரிவித்து போக்குவரத்து அமைச்சர் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை தலைவர் ஆகியோரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தொலைபேசி ஊடக தொடர்பு கொண்டு இவ்விடயத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து தீர்வை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதன் போது இது தொடர்பில் விளக்கமளிக்க முனைந்த இலங்கை போக்குவரத்து சபை தலைவருக்கு கடும் தொனியில் பேசிய பிரதமர் உடனடியாக சாலையை மீண்டும் சம்மாந்துறையில் திறக்குமாறும், இடமாற்றம் செய்யப்பட்ட ஊழியர்களை மீள சம்மாந்துறைக்கு திருப்பியனுப்புமாறும் உடனடியாக இந்த டிப்போவை இயங்கவைக்குமாறு உத்தவிட்டார். இதை தொடர்ந்து மீண்டும் சம்மாந்துறையில் சாலையை இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் மேலும் பல முக்கிய விடயங்களும் இங்கு பேசப்பட்டது.
இந்த சந்திப்பில் என்னுடன் முன்னாள் கிழக்கு முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாபிழ் இசட்.ஏ. நஸீர் அஹமட், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பைஸல் காஸிம், முன்னாள் பிரதியமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக், பாராளுமன்ற உறுப்பினர்களான இசாக் ரஹ்மான், சட்டத்தரணி முஷாரப் முதுநபின், அலிசப்ரி ரஹீம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர் என்றார்.