எதிர்வரும் காலத்தில் இலங்கையர்களிற்கு சீனாவின் தடுப்பூசி செலுத்தப்படுமா என்பது தனக்கு தெரியாதென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ள தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இதனை தெரிவித்தார்.
அத்துடன், ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகாவின் முதல் தடுப்பூசி செலுத்தியவர்களிற்கு இரண்டாவது தடுப்பூசியாக சீனாவின் தடுப்பூசி செலுத்தப்படாது, உலக சுகாதார அமைப்பின் தற்போதுள்ள வழிகாட்டுதல்களின்படி தடுப்பூசி வகைகளை கலக்க முடியாது என்று தெரிவித்தார்.
தற்போது அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி கையிருப்பு இல்லாததால், சீன தயாரித்த சினோபார்ம் தடுப்பூசி இரண்டாவது டோஸாக வழங்கப்படுமா என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அத்துடன், முதல் டோஸ் செலுத்தப்பட்டதிலிருந்து 12 வாரங்களில் இரண்டாவது டோஸ் வழங்க Wஉலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியது. எனினும், முதல் தடுப்பூசி செலுத்தப்பட்ட 14-16 வாரங்களுக்கு பின்னரே, இரண்டாவது தடுப்பூசி வழங்க அரசாங்கம் இப்போது நடவடிக்கையெடுத்துள்ளது என குறிப்பிட்டார்.
அவரது கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, 2021 ஜனவரி 29 ஆம் திகதி தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது. முதல் டோஸை வழங்கியதில் இருந்து 4 வாரங்களில் இரண்டாவது டோஸை வழங்குமாறு உலக சுகாதார நிறுவனம் ஆரம்பத்தில் அறிவுறுத்தியது.
இருப்பினும், மேலும் ஆராய்ச்சிகளில் 12 வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸை செலுத்தினால், நோய் எதிர்ப்பு சக்தியை 95% அதிகரிக்க உதவும் என்பது தெரிய வந்தது.
முதல் டோஸ் வழங்கப்பட்ட பின்னர்14- 16 வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் வழங்கப்படுவது சிறந்த பலனை தருவது தெரிய வந்துள்ளது என அமைச்சர் விளக்கினார்.
எனினும், எதிர்காலத்தில் சீனாவின் தடுப்பூசி வழங்கப்படுமா என்பது தனக்கு இப்போது தெரியாதென கூறினார்.