புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் 144வது நாளாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த நவம்பர் 27ம் தேதி தொடங்கிய விவசாயிகள் போராட்டம் ஐந்து மாதங்களையும் தாண்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இதுவரை நடைபெற்ற அனைத்துகட்ட பேச்சுவார்த்தைகளிலும் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
இதனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் இன்று 144வது நாளை எட்டியுள்ளது. டெல்லி எல்லைகளான சிங்கு, திக்ரி, காசியாபாத் ஆகிய பகுதிகளில் கூடாரங்கள் அமைத்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இதுஒருபுறம் இருக்க டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு நேற்று இரவு 8 மணி முதல் வரும் 26ம் தேதி அதிகாலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று விவசாய அமைப்புகள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.