30 ஆண்டுகளாக நடைபெற்ற போரின்போது வடபகுதியில் ஆலயங்கள் குண்டு வீசப்பட்டு தாக்கப்பட்டன. தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். இந்த வேளையிலே தென்பகுதியில் இருந்து யாரும் எங்களுக்காக குரல் கொடுக்கவில்லை. இப்படியான ஒரு நிலையில் தென் பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்வுக்கு நாங்கள் ஏன் நினைவு நிகழ்வுகளை செய்ய வேண்டும் என்று ஒரு கேள்வி பலரிடையே நிச்சயமாக இருக்கின்றது.
ஆனால், பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அவற்றை எல்லாம் நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள் என இயேசு சொன்னதற்கு இணங்க, அவர்களுடைய துன்ப வேளைகளில் எங்களுடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டியது எங்களுடைய கிறிஸ்தவ மக்களுடைய கடமையாகும் என யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் தென் பகுதியில் பல இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டு தாக்குதலில் மரணமடைந்த பாதிப்படைந்த மக்களுக்கான இரண்டாவது ஆண்டு நிகழ்வு நாளை புதன்கிழமை 21 ஆம் தேதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.
எங்களுடைய நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்ற போரின்போது வடபகுதியில் எத்தனை ஆலயங்கள் குண்டு வீசப்பட்டு தாக்கப்பட்டன. எத்தனையோ மக்கள் இறந்தார்கள். தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். இந்த வேளையிலே தென்பகுதியில் இருந்து யாரும் எங்களுக்காக குரல் கொடுக்கவில்லை. எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிச்சயமாக இருக்கின்றது. அது உண்மைதான். இப்படியான ஒரு நிலையில் தென் பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்வுக்கு நாங்கள் ஏன் நினைவு நிகழ்வுகளை செய்ய வேண்டும் என்று ஒரு கேள்வி பலரிடையே நிச்சயமாக இருக்கின்றது.
ஆனால் சரியான ஒரு காரியத்தை ஒருவர் செய்யவில்லை என்பதற்காக சரியான ஒரு காரியத்தை நாங்கள் செய்யாது இருக்கக்கூடாது. ஆண்டவர் இயேசு சொல்லுவார் பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அவற்றை எல்லாம் நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள். அதற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என கூறப்படுகின்றது. அதேபோல் அவர்களுடைய துன்ப வேளைகளில் எங்களுடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டியது எங்களுடைய கிறிஸ்தவ மக்களுடைய கடமையாகும். ஆகவே நாளைய தினத்தில் இந்த அஞ்சலி நிகழ்வுகளை நாங்கள் செய்து எங்களுடைய ஆதரவினையும் அஞ்சலி களையும் செலுத்துவதற்கு முன் வருவோம்.