ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்த அரசாங்கம் பாதுகாப்பளித்து அனுமதி அளிப்பதை போல கடந்த யுத்தத்தின் போது உயிரிழந்தோயும் நினைவு கூருவதற்கு இந்த அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்திடம் நாங்கள் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றோம். இந்த ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தோரை நினைவுகூர்வதற்கு அனுமதி வழங்கி அதற்கான பாதுகாப்புகளை நீங்கள் கொடுக்கிறீர்கள். அதற்காக நாங்கள் நன்றி சொல்கின்றோம்.
இதேபோல தமிழ் மக்கள் தங்களுடைய வாழ்க்கையில் 30 ஆண்டுகளாக அனுபவித்த போரின் பொழுது இறந்து போன ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துபோன இளைஞர் யுவதிகளையும் நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்த எங்களுக்கு அனுமதி தரவேண்டும். பாதுகாப்பு தர வேண்டும். அது நாங்கள் செய்ய வேண்டிய ஒரு உணர்வுபூர்வமான நிகழ்வாக இருக்கிறது. என்பதையும் இந்த வேளையிலே தெரிவித்து இதனை இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் அதிக கரிசனை எடுத்து அனுமதிகளை விரைவில் வழங்க வேண்டும் என வினயமாக கேட்டுக்கொள்கிறேன்
ஆகவே அனைத்து மக்களுடன் இணைந்து குறிப்பாக யாழ் மறைமாவட்ட ஆயர் குருக்கள் துறவிகள் அனைவரும் இணைந்து தாக்குதலில் இறந்து போனவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்துவதற்கும் அதேபோல் பாதிக்கப்பட்டிருப்போருக்கும் ஆறுதல் கூறுவோம் எதிர்காலத்திலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது மக்கள் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழஇந்த நாட்டிலே சமாதானம் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.