நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் நுவரெலியா ஹக்கலை பிரதேசத்தில் இன்று (19)அன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் படுங்காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நுவரெலியா பகுதியிலிருந்து வெலிமடை பகுதியை நோக்கி சென்ற கார் ஒன்று அப்பகுதியில் வீதியால் சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் இருவரை மோதியுள்ளது.
இதன்போது, குறித்த இருவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த காரை வீதியில் கைவிட்டு அதன் சாரதி தப்பியோடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, விபத்தையடுத்து, அப்பகுதியில் பெருமளவானோர் ஒன்றுகூடியதுடன், விபத்து இடம்பெற்ற இடத்தில் ஏற்படும் தொடர் விபத்துகளுக்கு தீர்வாக வேகத்தடையை ஏற்படுத்தி தருமாறுகோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை சுமார் ஒரு மணித்தியாலயம் முன்னெடுத்தனர். இதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
–க.கிஷாந்தன்-