சைவத்தமிழர் பேரவையினது “திருக்கோவில் நிபுணர் குழுவின்” யாழ் – கிளிநொச்சி சிவப்பிராந்திய அமர்வானது நல்லை , சிவகுரு ஆதீன குருமகா சந்நிதானங்கள் திருமுன்னிலையில் நீதியரசர் வசந்தசேனன் ஐயா தலைமையில் நல்லை ஆதீனத்தில் ஞாயிறு (18) மாலை இந்துக் கற்கைகள் பீடாதிபதி சுகந்தி முரளிதரன் அம்மையாரின் தேவார பாராயணத்துடனும் நல்லை குருமகா சந்நிதானம், இந்து, சைவக் குருபீடாதிபதிகளின் அருளாசிகளுடனும் ஆரம்பமானது.
சிவபூமி தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன், முன்னாள் அரச அதிபர் திரு வேதநாயகன், திருக்கேதீச்சர செயலாளர் முன்னாள் இந்துக் கல்லூரி அதிபர் தயானாந்தராசா, கிளிநொச்சி திருநெறிக் கழக செயலாளர் சிவஞானம் சைவ வித்யா விருத்திச் சங்கத் தலைவர் கவிஞர் சோ. பத்மநாதன், சைவ பரிபாலன சபைத் தலைவர் திரு.சக்திவேல், கிளிநொச்சி உருத்திரபுரிசுவர பொருளாளர் உட்பட யாழ் – கிளிநொச்சி சைவ சமய அமைப்புக்களின் தலைவர்கள் அறங்காவலர்கள் இந்து கற்கைகள் பீடாதிபதி விரிவுரையாளர்கள் , புலமைசார் சைவச் சான்றோர்கள், சிவதொண்டர்கள் பங்கேற்று கருத்துப் பகிர்வுகளை செய்தனர்.
சைவ மகா சபை பொதுச் செயலாளர் மருத்துவர் பரா நந்தகுமார் கூட்டத்தை ஒருங்கிணைத்து உரை ஆற்றினார்.
சைவ பரிபாலன சபை மேனாள் தலைவர் நீதியரசர் வசந்தசேனனின் தலைமைத்துவ ஏற்பு உரை வழங்கினார்.
பின்வரும் பன்னிரு அம்ச திட்டம் அங்கீகரிக்கப்பட்டு தொடர் சிவப்பிராந்திய / மாவட்ட கலந்தமர்வுகளை மேற்கொண்டு, தொடர்ந்து முழுமையான வரைபு தயாரிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
1.திருக்கோவிலின் நான்கு சக்கரங்களாக விளங்கும் குருமார்கள், தர்மகர்த்தாக்கள், வழிபடுவோர், கோவில் சார்ந்த அமைப்பினர் ஒருங்கிணைந்து சைவத் தமிழ் மறுமலர்ச்சியில் பங்கேற்றப்பதற்கான வேலைத்திட்டம் ,ஒழுக்கக் கோவை , பொது ஒழுங்கு விதிகள், சட்டவாக்கங்கள் தயாரித்தல்
2. குருமார்களுக்கான வேத சிவாகம திருமுறை சைவ சித்தாந்த கற்கைகள் பயிற்நெறிகள்
3.கோவில் சார்ந்த சைவ அறப்பணி நிதியம்
கோவிலை சார்ந்த நலிவுற்ற குடிகளுக்கும் கல்வி, மருத்துவ பொதுப் பணிகளிற்கும் உதவுதல்
4அறநெறிப் பாடசாலை
சைவத்தமிழ் இளையோருக்கு வழிபாட்டு, பண்பாட்டு ,சமய சமூக அறம்சார் செயற்பாடுகளை வலுவாக, தொடர்ச்சியாக பொறிமுறை சார்ந்து முன்னெடுத்தல்
5.உளஆற்றுப்படுத்துகைள் மக்களிற்கு வழங்கல்,
குருமார்களுக்கான பயிற்சி நெறிகள்
6.திருக்கோவிலும் இயற்கை நேயமும் தலவிருட்சம், பூந்தோட்டம் இயற்கை விவசாயம், மரம் நடுகை
7.நீர் முகாமைத்துவமும் திருக்கோவிலும்
தீர்த்தம், குளம், கேணி கோவிற் கிணறு, நிலத்தடிநீர் சேமிப்பு
8.திருக்கோவில் சார் பொருளாதாரம்
9. கோவில்சார் மரபுரிமைகள் பாதுகாத்தல், கலைகள் வளர்த்தல்
10.சோதிடம், பஞ்சாங்கம், வாழ்க்கை துணைநலம் தேர்வு /சைவத்தமிழ் பெயர் சூட்டுதல்
11. பன்னிரு திருமுறை, திருப்புகழ், அருளாளர் பாக்கள் பயிற்சி
ஒதுவார், சிவதொண்டர், சிவமங்கையர் பயிற்சிகள்
12. சிவசின்னங்கள், சிவ தீட்சை, வாழ்வியல் சடங்குகள் விடயங்களில் கோவிலை சார்ந்த குடிகளுக்கு உதவுதல்
என்பன வரைபிற்கான ஆரம்ப முன்மொழிவுகளாக சமர்ப்பிக்கப்பட்டு ஏற்று கொள்ளப்பட்டது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த யாழின் முதன்மை சமயத் தலைவர்கள் அனைவரும் பங்கு கொண்ட சைவத் தமிழர் பேரவை திருக்கோவில் நிபுணர் குழு அமர்வில் சைவத்தமிழ் சிவாச்சாரியர்கள் உன்னதமான கருத்துப் பகிர்வுகளை மேற்கொண்டு நிபுணர் குழுவிற்கு வலுச் சேர்த்தனர்.
இந்து குருமார் பீடாதிபதி வண. ஜெகதீஸ்வரக் குருக்கள் ஐயா , சைவக்குருமார் பீடாதிபதி வண. கிருபானந்தக் குருக்கள் ஐயா, இந்து கற்கைகள் பீட சமஸ்கிருத துறைத் தலைவர் பால கைலாசநாதக் குருக்கள், வீணா கான குருபீட முதல்வர் சபா. வாசுதேவக் குருக்கள், சைவ சித்தாந்த சிரோண்மணி உமாசுதக் குருக்கள் ஐயா, யாழ் வண்ணை வீரமாகாளி கமல் குருக்கள் ஐயா ஆகியோர் கலந்து கொண்டு பன்னிரு அம்ச திட்டத்தை முன்கொண்டு செல்ல தங்கள் பூரண ஆசியையும் புலமைசார், குருத்துவ பயிற்சி சார் தளங்களிலும் காலத்திற்கு ஏற்ப முற்போக்கு சித்தாந்தங்களோடு எம் சைவத்தமிழரின் அடையாளங்களை பாதுகாக்க திருக்கோவில் சார்ந்து மக்களின் வாழ்வியலை மேம்படுத்த தங்கள் முழுமையான ஆதரவும் அனுசரணையும் தொடர்ந்து சைவத்தமிழர் பேரவைக்கு கிடைக்கும் என உறுதி அளித்தனர்.
யாழ் . பல்கலை இந்துக் கற்கைகள் பீடத்தினர் புலமைசார் தளத்தில் குருமார், அறநெறி ஆசிரியர் பயிற்சி நெறிகளை நடாத்துதல் உள்ளிட்ட விடயங்களில் முழுமையான தமது பங்களிப்பை வழங்குவதாகக் குறிப்பிட் டனர். பீடாதிபதி சுகந்தி முரளிதரன் சமஸ்கிருத துறை தலைவர் பால கைலாசநாதக்குருக்கள், சைவ சித்தாந்த துறை தலைவர் திருமதி வி. பவேனசன் விரிவுரையாளர் ச.முகுந்தன் ஆகியோர் கலந்து கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் பங்கேற்ற பட்டயக் கணக்காளர்
இரா.தர்சன் “ஆலயம் பொருளாதார மையம் ” எனும் மகுடத்தில் கோவிலை சார்ந்த குடிகளை கோவில் எவ்வாறு பொருளாதார ரீதியாக அரவணைக்க முடியும் என வரைபு ஒன்றினை சோழர் கால கோவில் முறைமைகளுடன் ஒப்பிட்டு சமர்ப்பித்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற பலரும் தீர்மானமிக்க ஒருங்கிணைக்கும் சக்தியாக பல்வேறு அமைப்புக்களும் இணைந்துள்ள சைவத் தமிழர் பேரவையை நாம் அனைவரும் சேர்ந்து சைவத்தமிழ் மக்களிடையே கொண்டு செல்லும் வேலைத் திட்டத்தை முன்னெடுப்போம் என முடிவு செய்தனர்.
கூட்டம் தவத்திரு .வேலன் சுவாமிகளின் தேவார பாராயணத்துடன் நிறைவுற்றது.