கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட வரைபு நாட்டின் அரசியலமைப்பிற்கு உட்பட்டுள்ளதா சட்டமா அதிபர் கூறியுள்ளதாக இலங்கை பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று ஒரு ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்த வரைபு அரசியலமைப்பை மீறவில்லை என்றும் ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்படலாம் என்றும் கூறினார்.
துறைமுக நகரம் ஒரு சீன நிறுவனத்தால் உருவாக்கப்பட்டிருந்தாலும், அது தொடர்பான அனைத்து விஷயங்களையும் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வந்துள்ள நிலையில், அது எவ்வாறு சீன ஆட்சியின் கீழ் உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.
ஆணைக்குழு மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்படும் என்றும், அதன் உறுப்பினர்கள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவால் நியமிக்கப்படுவார்கள். அவரால் மட்டுமே ஆணைக்குழுவை நியமிக்கவும் ரத்து செய்யவும் அதிகாரம் உள்ளது. முடிவுகளை எடுக்கும்போது சீன அரசாங்கங்களின் ஒப்புதல் தேவையில்லை. ஆணைக்குழுவில் சீன உறுப்பினர்கள் அங்கம் வகிக்கமாட்டார்கள் என்றும் கூறினார்.
சட்ட வரைவில் 73 பகுதிகள் உள்ளன. சீன நாட்டவர் ஆணைக்குழுவில் நியமிக்கப்பட வேண்டுமென ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லையென்றார்.
செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு ஆணைக்குழுவின் காலம் நீட்டிக்கப்படும் என்றார்.