இஸ்ரேலில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக நாளை (18) ஞாயிறு முதல் திறந்தவெளியில் மக்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இஸ்ரேல் அரசு கொரோனா தடுப்பூசியை மக்களிடையே கொண்டு செல்வதில் வெற்றி அடைந்துள்ளது. அந்த நாட்டில் இதுவரை 70% க்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசியை தீவிரப்படுத்தியதன் காரணமாக இஸ்ரேலில் பெப்ரவரி மாதத்திலிருந்தே கொரோனா தொற்று குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக இஸ்ரேலில் 300 க்கும் குறைவானவர்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனாவுக்கு எதிரான போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் இஸ்ரேல் சுகாதாரத் துறை அமைச்சர் யுலி எடெல்ஸ்டீன் வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா வைரஸிலிருந்து நம்மை பாதுகாக்க முகக்கவசங்கள் முக்கிய பாங்காற்றுகின்றன. இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் பொது இடங்களில் இனி முகக்கவசம் தேவையில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் மூடிய அரங்கில் நடைபெறும் நிகழ்வுகளில் மக்கள் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். வரும் ஞாயிறு முதல் இஸ்ரேலில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசங்கள் அணிந்து கொள்ளத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தியதன் காரணமாகவே இந்த நிலையை அடைந்துள்ளோம். தடுப்பூசிகள் பலனளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.