அண்மைய சர்ச்சைகளின் பின்னர் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனும் சங்கடமான சூழலில் சந்தித்துக் கொண்டனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் மகளின் பூப்புனித நீராட்டு விழா நேற்று (17) யாழ் புறநகரிலுள்ள அவரது வீட்டில் நடைபெற்றது.
இதில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சில தினங்களின் முன்னர் விக்னேஸ்வரன் பேட்டியொன்றில் மாவை சேனாதிராசாவை கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் விமர்சித்த தொனி கடுமையான விமர்சனங்களை எழுப்பியிருந்தது. பல தரப்பினரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், நேற்று இருவரும் சந்தித்துக் கொள்ளும் நிலைமையேற்பட்டது.
நிகழ்விற்கு முதலில் சென்றவர் மாவை சேனாதிராசா. அவருடன் மட்டக்களப்பு முன்னாள் எம்.பி சீ.யோகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
பின்னர் வந்த விக்னேஸ்வரன், முன்வரிசையில் மாவை சேனாதிராசா உட்கார்ந்திருப்பதை தவனித்தோ என்னவோ, பின்வரிசையில் உட்கார்ந்து விட்டார்.
சி.சிறிதரன் அதை தவனித்து, விக்னேஸ்வரனை முன்வரிசைக்கு அழைத்து வந்தார். மாவை சேனாதிராசாவிற்கு அருகில் உட்கார்ந்திருந்த சீ.யோகேஸ்வரன் எழுந்து, அந்த கதிரையை விக்னேஸ்வரனிற்கு வழங்கி, தள்ளி உட்கார்ந்தார்.
மாவை சேனாதிராசாவிற்கு அருகில் வரும் போதே-
“மாவையும் இங்கிருக்கிறார். நான் கொடுத்த பேட்டியினால் கடுமையான கோபத்தில் இருப்பார் என நினைக்கிறன்“ என கூறியபடி வந்து உட்கார்ந்தார்.
“இல்லை. நாங்கள் அப்படியான அரசியல் பாரம்பரியத்தில் வளரவில்லை. நீண்டகால அரசியல் செயற்பாட்டில் இருக்கிறோம். எம் மீதான தாக்குதல்களும், விமர்சனங்களும் புதிதில்லை. அதனால், இது ஒன்றும் பெரிய விடயமாக எனக்கு படவில்லை. ஆனால், உங்களின் கருத்திற்கு நான் பதில் வழங்குவேன்“ என சாவகாசமாக பதிலளித்தார்.
இந்த பதிலை விக்னேஸ்வரன் எதிர்பார்க்கவில்லையோ என்னவோ, அதன் பின்னர் இருவரும் நீண்டநேரமாக பேசிக்கொள்ளவில்லை.