சமந்தாவின் பாராட்டால், ‘குக் வித் கோமாளி 2’ புகழ் பவித்ரா மிகவும் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சியின் மூலம் புகழ், சிவாங்கி, பவித்ரா, கனி உள்ளிட்ட பலர் பிரபலமானார்கள். இதில் சதீஷ் நாயகனாக அறிமுகமாகும் படத்தின் நாயகியாக பவித்ரா நடிக்கும் வாய்ப்பு இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்துள்ளது. மேலும், இவருடைய போட்டோ ஷுட்களும் இணையத்தில் மிகவும் பிரபலம்.
தன்னுடைய போட்டோ ஷுட்களில் சமந்தாவின் முக்கியமான கதாபாத்திரங்களை அப்படியே செய்திருந்தார் பவித்ரா. இவை இணையத்தில் மிகவும் பிரபலம். அந்தப் புகைப்படத்தை வைத்து பவித்ராவின் போலி ட்விட்டர் கணக்கிலிருந்து “மேடம்.. நான் உங்களைப் போலவே இருக்கிறேனா” என்று சமந்தாவின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டுப் பதிவிட்டார்கள்.
இதற்கு சமந்தா, “நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்” என்று பதில் அளித்தார். இந்தப் பதிவு பவித்ராவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலானது. உடனடியாக பவித்ரா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பதிவிலிருந்து சமந்தாவுக்கு பதில் அளிக்கும் விதமாக கூறியிருப்பதாவது:
“உங்கள் கனிவான பதிலுக்குக் கோடி நன்றிகள். இந்த ஃபோட்டோஷூட்டே மறக்க முடியாத மித்ரா கதாபாத்திரத்தை மீண்டும் உருவாக்கத்தான். நாங்கள் அனைவரும் உங்களது மிகப்பெரிய ரசிகர்கள் என்பதையும் மறக்க வேண்டாம். மேலும், உங்களில் நான் 1 சதவீதம் கூட இல்லை. அது திறமையோ, பன்முகத்தன்மையோ. அந்த அடையாளம் என்னுடையது அல்ல. மிக்க நன்றி”
இவ்வாறு பவித்ரா தெரிவித்துள்ளார்.