மட்டக்களப்பு மாநகர சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றினால் தான் பாதிக்கப்பட்டதாக கூறி, மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறையிடவுள்ளதாக உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 8ஆம் திகதி நடை பெற்ற அமர்வின் ஊடாக மின்சார குழாமில் கடமையாற்றிவரும் சூசைப்பிள்ளை என்பவரை அவரது நியமனத்திற்கு அமைய வேலைத்தொழிலாளியாக விடுவிக்கக் கோரி ஒர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதனை நடைமுறைப்படுத்துமாறு. பிரதி ஆணையாளருக்கு முதல்வர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். இது தொடர்பிலேயே அவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சூசைப்பிள்ளையிடம் வினவியபோது-
நான் கடந்த பத்து வருடங்களாக மாநகர சபையில், மின்சார தொழிலாளர் குழாமில் கடமையாற்றி வருகின்றேன். இதற்கு முன்பிருந்த ஆணையாளர் நியமனத்தினையும் வழங்கியுள்ளார். மாறாக எமது மாநகர சபையில் சாரதிகள், காவலாளிகள், நூலக உதவியாளர்கள், இரும்பு ஒட்டுனர்கள், பதில் சுகாதார மேற்பார்வையாளர்கள், வேலைகள் மேற்பார்வையாளர்கள், சந்தை மேற்பார்வையாளர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலதரப்பட்ட பிரிவுகளில் 80 பேருக்கு மேல் கடமையாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவருமே வேலைத் தொழிலாளி நியமனம் பெற்றவர்களே.
இவ்வாறிருக்க, என்னை மாத்திரம் பக்கச் சார்பான முறையில் நியமன அடிப்படையை சுட்டிக்காட்டி தார் ஊற்றும் தொழிலாழியாக விடுவிக்க எவ்வாறு தீர்மானம் நிறைவேற்ற முடியும். இது என்னை தனிப்பட்ட முறையில் பழிவங்கும் செயற்பாடாகவே நான் கருதுகின்றேன். எனவே இதுவொரு அநீதியான தீர்மானம். மாற்றுவதாயின் அனைவரையும் மாற்ற வேண்டும். இது தொடர்பில் ஆணையாளரிடம் மேன் முறையீடு செய்துள்ளதுடன் மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் செல்லவுள்ளேன் என தெரிவித்தார்.
இது தொடர்பில் ஆணையாளரிடம் வினவியபோது-
குறித்தவொரு நபரை மேற்கோள் காட்டி அவரை நியமனத்தின் அடிப்படையில் மின்சார வேலைகள் குழாமில் இருந்து விடுவித்து வேலைத் தொழிலாளியாக அமர்த்துமாறு மாநகர சபை முதல்வர் பிரதி ஆணையாளருக்கு அறிவித்துள்ளமை தொடர்பாக குறித்த நபரிடமிருந்து எனக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
சாரதிகள், காவலாளிகள், நூலக உதவியாளர்கள், இரும்பு ஒட்டுனர்கள், பதில் சுகாதார மேற்பார்வையாளர்கள்,வேலைகள் மேற்பார்வையாளர்கள், சந்தை மேற்பார் பார்வையாளர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் போன்ற பல துறைகளில் வேலைத் தொழிலாளி நியமனம் பெற்றவர்களே அமர்த்தப்பட்டுள்ளனர். நிலமை இவ்வாறிருக்க குறித்த ஒருவரை மாத்திரம் விடுவிப்பது நியாயமற்ற செயற்பாடாகும். எனவே அனைவரையும் விடுவிக்குமாறு பிரதி ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பிதுள்ளேன் என தெரிவித்தார்.
பின்னணி-
மட்டக்களப்பு மாநகரசபையில் அதிகார போட்டி ஏற்பட்டுள்ளது. ஆணையாளரும், முதல்வரும் அதிகார போட்டியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் முதல்வர் தரப்பினால் நீதிமன்றத்தை நாடி, ஆணையாளரிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களிற்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆணையாளரிற்கு ஆதரவான தரப்பினர் நகரில் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போது, ஆணையாளர் ஆதரவு தரப்பை சேர்ந்த சூசைப்பிள்ளை, தமக்கு ஒழுங்கான பாதுகாப்பு உடைகள், உபகரணங்கள் வழங்கப்படவில்லை, இதனால் வேலை செய்ய சிரமமாக உள்ளதாக தெரிவித்தார்.
அவர், ஒழுங்கான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமையினால் வேலை செய்ய முடியாமலுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், 8ஆம் திகதிய அமர்வில், “அவர் தன்னால் வேலை செய்ய முடியாமலுள்ளது என கூறியுள்ளார். எனவே அவரை பணி மாற்றுவோம்“ என முதல்வர் தரப்பினால் தெரிவிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முதல்வர்- ஆணையாளர் அதிகார போட்டியினால் மட்டக்களப்பு மாநகரசபை பெரும் சீர்குலைவை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.