மொனராகலை பிரதேசத்தில் நடந்த மரண வீட்டில், சவப்பெட்டியில் இருப்பது வேறொருவரின் சடலம் என்பது தெரிய வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மொனராகலை, அதிலிவெவ பகுதியை சேர்ந்தவர் ஜே.ஏ.எல். ஞானதிலக (55).இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவர், கடந்த 9ஆம் திகதி மாலை கிணற்றில் விழுந்து உயிரிழந்தார்.
பொலிசார் அவரது உடலை வெல்லவாய ஆதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், மறுநாள் சடலம் பிரேத பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
12 ஆம் திகதி பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, சடலம் அன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
உறவினர்கள் அன்று மாலையே உடலை, மலர்ச்சாலை ஒன்றில் ஒப்படைத்தனர்.
அலங்கரிக்கப்பட்ட பெட்டியில் மறுநாள் (13) காலையில் உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அன்று காலையில், உயிரிழந்தவரின் மகள் சடலத்தை பார்வையிட்டு அதிர்ச்சியடைந்தார்.
காரணம், தனது தந்தையின் தோற்றத்தை விட பருமனான தோற்றத்துடனும், தாடி வளர்ந்த நிலையிலும் சடலம் காணப்பட்டது. அவரது தந்தை தாடியை மழித்திருந்தார்.
உடனடியாக, குடா ஓயா பொலிசாருக்கு தகவல் அளித்து சடலம் மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஒக்காம்பிட்டிய, மாலிகாவில பகுதியில் 11 ஆம் திகதி காட்டு யானை தாக்கி இறந்த அனுர குணரத்ன என்பவரின் சடலமே தவறுதலாக அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
அனுர குணரத்தினவின் உறவினர்களிடம் வழங்கப்பட்ட ஞானதிலகவின் உடலை அவர்கள் புதைத்து விட்டனர்.
தகவறிந்த பின்னர் சடலம் மீள தோண்டியெடுக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்று மாலையே இறுதிக்கிரியை நடந்தது.
இது குறித்து மொனராகலை மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.
.