விரைவில் விழித்துக் கொள்ளுங்கள். இலங்கை தமிழ் அரசு கட்சியை அழித்தவர் என்ற அவப்பெயரை வரலாற்றில் சூடிக் கொள்ளாதீர்கள் என காட்டமான கடிமொன்றை இரா.சம்பந்தனிற்கு அனுப்பி வைத்துள்ளார் இலங்கை தமிழர் அரசு கட்சியின் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு நேற்று (16) இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
அரச ஆதரவு தனியார் தொலைக்காட்சியொன்றிற்கு அண்மையில் நேர்காணல் வழங்கிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், கடந்த பொதுத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் வெற்றிபெற்ற கூட்டமைப்பு வேட்பாளர்கள் தனிப்பட்ட செல்வாக்கினால்தான் வெற்றிபெற்றார்கள், கட்சிக்கு மக்கள் வாக்களிக்கவில்லை, அப்படி வாக்களிததிருந்தால் கட்சித்தலைவர், செயலாளர் வெற்றிபெற்றிருப்பார்கள் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழ் அரசு கட்சியின் பிரமுகர் கே.வி.தவராசாவினால், இரா.சம்பந்தனிற்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தின் சாராம்சம் வருமாறு-
தங்களின் தலைமைத்துவ காலத்தில் தமிழர்களின் அரசியல் பலத்தை சிதைத்த அவப்பெயரை சம்பாதித்து கொள்ளாதீர்கள்.
கட்சிக்கு வாக்களிக்கவில்லை, தனிப்பட்ட ரீதியான வாக்குகளாலேயே வெற்றியடைந்ததாக ஆபிரஹாம் சுமந்திரன் அகங்காரத்துடன் தெரிவித்திருப்பது, வாக்களித்த மக்களை அவமதிப்பதாகும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் இன்னும் நியமிக்கப்படவில்லை. எனினும், ஆபிரஹாம் சுமந்திரன், தானே பேச்சாளர் என பிரதிபலித்துக் கொண்டு கருத்து வெளியிட்டு வருவது கட்சியின் இருப்பிற்கே ஆபத்தானது.
பசில் ராஜபக்சவிற்கு ஆதரவளிக்க தயாரன அறிவித்து முதல் தனிப்பட்ட வாக்கினால் வென்றதாக கூறியது வரையானது கட்சிக்கு வாக்களித்த மக்களை அதிருப்திக்குள்ளாக்கும்.
இப்படி பொறுப்பற்ற வகையில் செயற்படும் நபரை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டும்.
குறித்த நபர் ஊடகப்பேச்சாளர் அல்லவென்பதை விரைவில் அறிவித்து, கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயரை சரி செய்ய முயற்சியுங்கள். கட்சிக்கு எதிராக செயற்படும் ஆபிராஹாம் சுமந்திரனின் பின்னணி என்ன?
இந்த இக்கட்டான நிலையில் உங்களின் கடமையை சரியாக செய்யாவிட்டால், தமிழ் தேசிய கூட்டமைப்பு இறுதி அத்தியாயத்தை எழுத நேரிடும். அப்படியொரு சம்பவம் நடந்தால், அதற்கு பொறுப்பானவராக நீங்களே இருப்பீர்கள்.