ஹிப் ஹாப் தமிழா நாயகனாக நடித்து வரும் ‘அன்பறிவு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.
‘நான் சிரித்தால்’ படத்துக்குப் பிறகு, ‘சிவகுமாரின் சபதம்’ படத்தை இயக்கி, அதில் நாயகனாகவும் நடித்துள்ளார் ஹிப் ஹாப் தமிழா. அந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சத்யஜோதி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, ஹிப் ஹாப் தமிழா நாயகனாக நடிக்கும் அடுத்த படத்தையும் தயாரித்து வருகிறது சத்யஜோதி நிறுவனம். இதனை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அஸ்வின் ராம் இயக்கி வருகிறார்.
‘அன்பறிவு’ எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தில் நெப்போலியன், விதார்த், காஷ்மீரா, சாய்குமார், ஊர்வதி, சங்கீதா க்ரிஷ், தீனா உள்ளிட்ட பலர் ஹிப் ஹாப் ஆதியுடன் நடித்து வருகிறார்கள். தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ‘அன்பறிவு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்குப் படக்குழுவினருக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
‘அன்பறிவு’ படத்தின் ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கம், எடிட்டராக ப்ரதீப் ராகவ், இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தின் கதையை ஹிப் ஹாப் ஆதியே எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.