கொழும்பு துறைமுக நகரம் ஒரு தனி நாடாக மாறும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று இலங்கை பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவை நிறுவுவதற்கான சட்ட வரைவு குறித்து நாரஹேன்பிட்டி அபயராமயா விகாரையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய விஜயதாச ராஜபக்ஷ,
சட்டவரைபு நிறைவேற்றப்பட்டால், கொழும்பு துறைமுகம் நகரம் நாட்டின் நிர்வாக ஆட்சியில் இருந்து விடுபடும். சட்ட வரைபின் படி, துறைமுக நகரம் இலங்கைக்கு சொந்தமானதல்ல, கொழும்பு நகராட்சி மன்றத்தின் கீழ் வராது.
1,100 ஏக்கர் நிலப்பரப்பு மேற்கு மாகாணத்தின் கீழ் வராது, கொழும்பு மாவட்டத்திற்குள்ளும் வராது. அது ஒரு ஆணைக்குழுவால் கட்டுப்படுத்தப்படும்
சீன முதலீட்டாளரின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படும்.
சட்டமூலம் நிறைவேற்றப்படும் போது, துறைமுக நகரத்தின் முழுமையான கட்டுப்பாட்டையும் நகர அபிவிருத்தி அதிகாரசபை இழக்கும்.
இந்த பகுதி நாட்டின் சட்டத்தின் கீழ் வராது. வரி தொடர்பான 14 சட்டங்களில் இருந்து விடுபட்டுள்ளது என்றார்.
துறைமுக நகர நிலப்பரப்பு ஒரு சீன காலனியாக இருக்கும் என்றும் துறைமுக நகருக்குள் உள்ள நிலங்களை பல்வேறு நாடுகளுக்கு விற்கலாம் அல்லது சொந்தமாக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
நிலம், நிர்வாக அமைப்பு மற்றும் வெளிநாட்டு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் அதிகாரம். ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் துறைமுக நகரத்தை ஒரு தனி நாடாக கருதலாம் என்று தெரிவித்தார்.