கொரோனாப் பெருந்தொற்றுக் காரணமாகத் தொடர்ந்து மூன்றாவது வாரமாக முடக்கப்பட்டிருக்கும் திருநெல்வேலி பாரதிபுரம் கிராமத்துக்குத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்றுக் காரணமாக இரண்டு வாரங்கள் பூரணமாக முடக்கப்பட்டிருந்த திருநெல்வேலி மத்தி – வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் பாரதிபுரம் தவிர்ந்த ஏனைய பகுதிகளின் முடக்கநிலை விலக்கப்பட்டுள்ளது.
அதிக தொற்று அடையாளம் காணப்பட்டதால் பாரதிபுரம் பகுதியின் முடக்கம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. முடக்க நிலையை இறுக்கமாகக் கடைப்பிடிக்கும் பொருட்டுக் காவல்துறையும் இராணுவமும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.
ஆயிரத்தி நூற்றி முப்பத்தாறு குடும்பங்களைக் கொண்ட திருநெல்வேலி மத்தி – வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் பாரதிபுரத்தில் 350 குடும்பங்கள் வரையில் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் அன்றாடம் உழைக்கும் கூலித் தொழிலாளர்கள் என்பதால் தொடர்ச்சியான முடக்கம் இவர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளதாக இப்பகுதிக் கிராம சேவையாளர் தெரிவித்ததையடுத்துத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் முதற்கட்டமாக நேற்று முன்தினம் (13.04.2021) 150 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளது.