த்ரிஷ்யம் 2′ திரைப்படம் கன்னடத்திலும் ரீமேக் ஆகிறது. கன்னடத்தில் முதல் பாகத்தை இயக்கிய பி.வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ளார்.
2013ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான படம் ’த்ரிஷ்யம்’. தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி எனப் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அத்தனையிலும் வெற்றி கண்டது. சீன மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.
கன்னடத்தில் ‘த்ரிஷ்யா’ என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் ரவிச்சந்திரன், நவ்யா நாயர், ஆஷா சரத், பிரபு, அச்யுத் குமார் உள்ளிட்டோர் நடித்தனர். இளையராஜா இசையமைத்தார். 2014ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மற்ற மொழிகளைப் போலவே வெற்றிப் படமாக அமைந்தது.
சில மாதங்களுக்கு முன் மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணியில் ஓடிடி தளத்தில் ‘த்ரிஷ்யம் 2’ வெளியாகி முதல் பாகத்தைப் போலவே விமர்சனங்களிலும், ரசிகர்களாலும் பெரும் பாராட்டைப் பெற்றது. இந்த வரவேற்பால் ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் ரீமேக் பணிகள் மும்முரமாகத் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே வெங்கடேஷ் நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கத்தில் இரண்டாம் பாகத்தின் தெலுங்கு வடிவம் தயாராகி வருகிறது.
தற்போது கன்னடத்திலும் இரண்டாம் பாகம் தயாராகிறது. முதல் பாகத்தை இயக்கிய பி.வாசுவே இயக்குகிறார். ரவிச்சந்திரன், நவ்யா நாயர் என மீண்டும் அதே அணியுடன் இன்னும் சில நாட்களில் இந்தப் படத்தின் வேலைகள் தொடங்கப்படவுள்ளன.