எதிர்வரும் வடமாகாணசபை தேர்தலில் பொது வேட்பாளராக தான் களமிறங்க வாய்ப்பில்லையென யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபை தேர்தலில் வி.மணிவண்ணன் பொதுவேட்பாளராக களமிறக்க சில தரப்புக்கள் திட்டமிடுவதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, தமிழ்பக்கம் அவரை தொடர்பு கொண்டு வினவியது.
அண்மையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதான அவரது விடுதலைக்கு டக்ளஸ் தேவானந்தா பின்னணியில் செயற்பட்டதாக கூறியது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்தார்.
எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவாரா என வி.மணிவண்ணனிடம் தமிழ் பக்கம் வினவியபோது,
“அதைப்பற்றி இன்னும் யோசிக்கவில்லை. யாழ் மாநகரசபையை திறம்பட நிர்வகிப்பதை பற்றியே இப்போதைக்கு சிந்திக்கிறோம்“ என்றார்.
மாகாணசபை தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்கும் வாய்ப்புள்ளதா என தமிழ்பக்கம் வினவியபோது,
“இல்லை. அதற்கு வாய்ப்பேயில்லையென்றுதான் நினைக்கிறேன்“ என்றார்.
அண்மையில் பயஙகரவாத தடுப்பு பிரிவினரால் வி.மணிவண்ணன் கைதாகியிருந்தார். அவரது விடுதலைக்கு பின்னணியில் தாமே செயற்பட்டதாக ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, சட்டத்தரணி றெமீடியஸ், மாநகரசபை உறுப்பினர் ப.யோகேஸ்வரி ஆகியோர் கூறியிருந்தனர்.
இது பற்றி அவரிடம் வினவியபோது,
என்னை பயங்கரவா தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பல சட்டத்தரணிகள் ஆஜராகினர். அதில் ரெமீடியசும் ஆஜராகினார். என்னை பிணையில் நீதிமன்றம் விடுவித்ததுதான் எனக்குத் தெரியும்.
பலர் கதைத்திருக்கிறார்கள். இதில் தானும் கதைத்ததென சொல்கிறார். இதை நான் போய் ஆராய்ந்து பார்க்க வேண்டுமா? அதை எப்படி ஆராய்ந்து பார்க்க முடியும். உண்மையாக இவர் கதைத்தாரா என கோட்டாபயவிடம்தான் கேட்க வேண்டும்.
நீங்கள் கதைக்கவில்லையென மறுப்பறிக்கை விட முடியுமா? நீங்கள் கதைத்துதான் வந்தேனென்றால், நான் இப்பொழுதே திரும்பி போகிறேன் என பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் திரும்பிச் செல்லட்டுமா? ஒன்றுமே செய்ய முடியாதே.
என்னைப் பொறுத்தவரை ஒரு காதால் கேட்டு, மற்றைய காதால் விட்டுவிட்டு இருக்கிறேன் என்றார்.