சேலத்தில் 7 வயதுச் சிறுமியை ரூ.10 லட்சத்துக்கு தொழிலதிபருக்கு விற்பனை செய்ததாக சிறுமியின் பாட்டி அளித்த புகாரில், தாய்- தந்தை மற்றும் தொழிலதிபரை போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி, டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு தனது பேத்தியை தொழிலதிபர் ஒருவரிடம் பெற்றோரே விற்பனை செய்ததாகப் புகார் அளித்திருந்தார். அவர் அளித்த புகாரில், எனது மகள் தொழிலதிபர் ஒருவர் வீட்டில் வேலை பார்த்து வருகிறார். மகள் பணத்துக்காக எனது ஏழு வயதுப் பேத்தியை தொழிலதிபரிடம் கொடுத்துவிட்டார். உடனடியாக எனது பேத்தியை மீட்டு ஒப்படைக்க வேண்டும்,’ எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து சைல்டு லைன் அமைப்புக்குத் தகவல் கொடுக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஏழு வயதுச் சிறுமி மீட்கப்பட்டு, அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில், சிறுமியின் தாய், உறவினர் பெண்ணுடன் பேசும் ஆடியோ, வாட்ஸ் அப் மூலம் வைரலானது. அதில், ‘மகளை ரூ.10 லட்சத்துக்கு விற்பனை செய்துவிட்டேன், எனது மகளை அவர் நன்றாகப் பார்த்துக் கொள்வார்’ என்ற உரையாடல் பதிவாகியிருந்தது.
இதையடுத்து, சிறுமியை ரூ.10 லட்சத்துக்கு பெற்றோர் விற்பனை செய்தது குறித்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் சிறுமியின் பெற்றோர், தொழிலதிபர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். சிறுமியிடமும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் ஏற்பட்டதா என்பது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தொழிலதிபர், சிறுமியின் தாய், தந்தை மூவரையும் டவுன் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர். மூவர் மீதும் இபிகோ 80, 81 பணம் கொடுத்து, வாங்குவது, 370 (ஏ), 372 குழந்தையை விற்பனை செய்வது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
போலீஸார் விசாரணையில், ‘தொழிலதிபர் ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது மனைவி இல்லாத நிலையில், மகன்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். வீட்டுக்கு வேலைக்கு வந்த சிறுமியைப் பார்த்ததும், தன்னுடன் வைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் இருந்த சிறுமியின் தாய், குழந்தையைத் தொழிலதிபரிடம் ஒப்படைத்துள்ளது தெரியவந்தது. இதற்காக அவர் பணம் எவ்வளவு பெற்றார், அந்தப் பணத்தை என்ன செய்தார் என்பது குறித்து போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த சிறுமியின் பாட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
”எனது வீட்டில் மகள், பேத்தி வசித்து வந்தனர். பேத்தியை நான்தான் படிக்க வைத்துக் கொண்டிருந்தேன். சீலநாயக்கன்பட்டியில் உள்ள தொழிலதிபர் ஒருவரது வீட்டுக்கு, மகள் வேலைக்குச் சென்று வந்தார். அப்போது, பேத்தியையும் உடன் அழைத்துச் செல்வார். சில நேரங்களில் பேத்தியை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துவிடுவார். குழந்தை மீது தொழிலதிபர் பாசமாக இருப்பதாகவும், அதனால் விட்டுவிட்டு வந்ததாகவும் மகள் பதில் கூறுவார். சில நாட்கள் 10, 15 நாட்கள் கூட பேத்தி வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார். குழந்தையை ஏற்காடு, கோவா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு தொழிலதிபர் உடன் அழைத்துச் சென்று வந்துள்ளார்.
இதுகுறித்து மகளிடம் கேட்கும்போது, சரியான பதில் கூறுவதில்லை. நானே தொழிலதிபர் வீட்டுக்குச் சென்று, பேத்தியைப் பார்க்க முடியாமல் திரும்பி வந்துள்ளேன். குழந்தையைப் பார்க்க வேண்டி சண்டை போட்டுள்ளேன். இதனால், காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, பேத்தி மீட்கப்பட்டு அரசு பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பேத்தியின் அக்காவும் (10) பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். பெற்றோர் சரியில்லாத நிலையில், எந்த விதத்திலும் அவர்களுடன் குழந்தைகளை அனுப்பக் கூடாது. இரண்டு பேத்திகளையும் என்னுடன் அனுப்பி வைக்க வேண்டும். நான் அவர்களை நன்றாகப் பார்த்துக்கொண்டு, படிக்க வைப்பேன்”.
இவ்வாறு மூதாட்டி தெரிவித்தார்.