பிரிட்டனில் பரவும் உருமாற்றமடைந்த கொரோனாவினால் தீவிர விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை என்று அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தெற்கு இங்கிலாந்தில் உள்ள கென்ட் மாகாணத்தில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் ஏற்கெனவே இருந்த கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைவிட 70 சதவீதம் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என அறியப்பட்டது.
அதற்கு ஏற்ப அடுத்த சில வாரங்களில் பிரிட்டனில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்தது.பிரிட்டனில் டிசம்பர் மாத நடுப்பகுதியில் நாடு முழுவதும் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. இதனால் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் கொண்டாட்டங்களைக் குறைத்துக் கொள்ளவும் மக்களுக்கு பிரிட்டன் அரசு அறிவுறுத்தியது.
பிரிட்டனில் பரவிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பைப் பார்த்து ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இந்தியா, வளைகுடா நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்தின.
இதற்கிடையே கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் பைஸர் தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்த பிரிட்டன் அரசு அனுமதியளித்தது. உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தீவிரத்தைப் பார்த்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தையும் மக்களுக்குச் செலுத்த பிரிட்டன் சுகாதாரத்துறை அனுமதி அளித்தது.
இந்நிலையில் பிரிட்டனின் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் குறித்து அறிவியல் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் உருமாற்றமடைந்த வைரஸ்களால் உடலில் தீவிர விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் மருத்துவ நிபுணர்கள் வெளியிட்ட அறிக்கையில், “ உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸினால் இறப்புகளோ, பெரிய அளவிலான விளைவுகளோ ஏற்படவில்லை. எனினும் இந்த ஆய்வை விரிக நடத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.