கால்வாய் ஒன்றில் மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம் அடையாளம் காண்பதற்காக கல்முனை ஆதார வைத்தியசாலையின் சவச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) பிரதான வீதியோரத்தில் அமைந்திருந்த நீரோடும் கால்வாயில் இனந்தெரியாத ஒருவரின் சடலம் கிடப்பதாக பொதுமக்களின் தகவலின் பிரகாரம் சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தது.
சுமார் 35 முதல் 40 வரையிலான வயது மதிக்கத்தக்க இச்சடலம் கொலைசெய்யப்பட்டு போடப்பட்டதா அல்லது இயற்கை மரணமா அல்லது வாகன விபத்தினால் ஏற்பட்டதா? என பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதிவான் பார்வையிட்டிருந்தார்.
அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ள நிலையில் சடலத்தின் பக்கெட்டில் இருந்து கைத்தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த சடலம் மாலை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன் சான்று பொருளாக சடலத்தின் பக்கெட்டில் இருந்த நிறுத்தப்பட்டுள்ள குறித்த கைத்தொலைபேசியை செயற்படுத்தி ஆராய்ந்து உண்மை நிலையையும் சடலமாக மீட்கப்பட்டவரின் விபரங்களையும் இன்று(12) அறிய முடியும் என பொலிஸார் நம்பிக்கை வெளியீட்டுள்ளனர்.
-பா.டிலான்-