எனக்குத் தெரிந்த அம்மா ஒருவருக்கு சமீபத்தில்தான் இரட்டைக் குழந்தைகள் பிறந்தார்கள். தொட்டில் போடும் நிகழ்வுக்கு வந்தவர்களிடமிருந்து குழந்தைகளுக்கும் அம்மாவுக்கும் கொரோனா தொற்றிவிட்டது.
இந்த கொரோனா காலத்தில், தாய் – சேய் நல விஷயத்தில் இரண்டு பிரச்னைகள் இருக்கின்றன. ஒன்று, அம்மாவுக்கு கொரோனா இருந்தால், அவர் வயிற்றில் இருக்கிற சிசுவுக்கும் கொரோனா தொற்று ஏற்படுமா என்ற சந்தேகம்… இதற்கான பதில் இன்னமும் ஆராய்ச்சி நிலையிலேயே இருக்கிறது. இரண்டாவது, பிறந்த பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் எப்படித் தவிர்ப்பது… இதுகுறித்து மகப்பேறு மருத்துவர் நிவேதாவிடம் கேட்டோம். “என்னைச் சந்திக்கிற இளம் தாய்மார்களுக்கு என்னென்ன வழிமுறைகளைச் சொல்கிறேனோ, அவற்றை அப்படியே சொல்கிறேன்…” என்றவர் தொடர்ந்தார்.
இரண்டு பேர் போதும்!
குழந்தையின் அம்மா, அவருக்கு உதவிக்கு இருக்கிற இன்னொரு நபர் தவிர, மற்றவர்கள் குழந்தையைத் தூக்காமல் இருப்பதே நல்லது. வேலைக்கு, கடைக்கு என்று தினமும் வெளியே சென்று வருகிற நபர் பச்சிளம் குழந்தை இருக்கிற அறையின் பக்கம்கூட வராமல் இருப்பதே நல்லது. முக்கியமாக, குழந்தைக்கும் குழந்தையின் அம்மாவுக்கும் உதவி செய்பவர், வெளியே எங்கும் செல்லக்கூடாது.
தவிர்க்க முடியாத நபர் என்றால்…
குழந்தையின் அப்பாவை, `குழந்தையைத் தூக்காதீர்கள்’ என்று சொல்ல முடியாது. இவர்கள். குளித்துவிட்டு, முகத்துக்கு வால்வ் இல்லாத என் 95 மாஸ்க் அணிந்துகொண்டுதான் குழந்தையைத் தூக்க வேண்டும். மற்ற உறவினர்கள் குழந்தையை ஆறு மாதங்கள் கழித்துப் பார்த்துக்கொள்ளலாமே…
மகப்பேறு மருத்துவர் நிவேதா:
அம்மாவுக்கு கொரோனா தொற்று இருந்தால்…
கொரோனா தொற்று இருந்தாலும் குழந்தைக்குப் பாலூட்டலாம். ஆனால், குழந்தையைத் தூக்குவதற்கு முன்னால் இரண்டு கைகளையும் சோப் போட்டு நன்கு கழுவ வேண்டும். முகத்துக்குக் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். குழந்தை பாலருந்தி முடித்தவுடனே, கொரோனா தொற்று இல்லாத வேறொரு நபரிடம் உடனே குழந்தையைக் கொடுத்துவிட வேண்டும். இந்த நபரும் கைகளை அவ்வப்போது சுத்தம் செய்துகொள்ள வேண்டும்; மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்; வெளி நபர்களுடன் தொடர்பிலும் இருக்கக்கூடாது.
பச்சிளம் பாப்பாவுக்கு சளி பிடிக்காமல் இருக்க…
குழந்தைக்கு சளித்தொல்லை ஏற்படுத்துகிற கிருமியும் காற்றில் பரவக்கூடியதுதான். அதனால்தான், குழந்தையின் அம்மாவாக இருந்தாலும் சரி, குழந்தையின் அம்மாவுக்கு உதவி செய்கிற நபராக இருந்தாலும் சரி, தங்களுக்கு சளித்தொல்லை இருந்தால், குழந்தையின் அருகில் வெகுநேரம் இருக்கக் கூடாது. மாஸ்க்கும் கைச்சுத்தமும் இவர்களுக்கு முக்கியம்.
ஆறு மாத குழந்தைக்கான திட உணவு எப்படி இருக்க வேண்டும்?
பழக்க வழக்கங்களும் பிரச்னையாகும்!
நம் ஊரில் குழந்தை பிறந்தவுடன் பெயர் சூட்டுவது, தொட்டிலில் போடுவது என்று ஃபங்ஷன் வைப்பது சகஜம். இந்த நேரத்தில் இதெல்லாம் செய்யாமல் இருப்பதே பாதுகாப்பு. இதுபோன்ற ஃபங்ஷன்களை வைத்து, வீட்டுக்கு 10 பேர் வந்தாலும் யார் அறிகுறிகளற்ற கொரோனா நோயாளி என்பது நமக்கு தெரியாதில்லையா..? எனக்குத் தெரிந்த அம்மா ஒருவருக்கு சமீபத்தில்தான் இரட்டைக் குழந்தைகள் பிறந்தார்கள். தொட்டில் போடும் ஃபங்ஷனுக்கு வந்தவர்களிடமிருந்து குழந்தைகளுக்கும் அம்மாவுக்கும் கொரோனா தொற்றிவிட்டது. அம்மா ஒரு மருத்துவமனையில், குழந்தைகள் ஒரு மருத்துவமனையில் என்று அவஸ்தைப்பட்டார்கள். இதெல்லாம் நடக்காமல் இருப்பது வீட்டுப்பெரியவர்களின் கைகளில்தான் இருக்கிறது.
வெளிநபர் குளிக்க வைக்கிறாரா?
பச்சிளம் குழந்தைகளைக் குளிப்பாட்டுவதற்கென்றே ஊருக்கு ஒருவர் இருப்பது, தெருவுக்கு ஒருவர் இருப்பதுபோன்ற நடைமுறைகளும் நம் நாட்டில் சகஜம். அப்படிக் குளிப்பாட்ட வருபவர்களின் கான்டாக்ட் பற்றியெல்லாம் நமக்கு தெரியாது என்பதால், இந்தப் பழக்கத்தை இன்னும் ஒரு வருடத்துக்கு மட்டுமாவது செய்யாமல் இருப்பது நல்லது.
மூக்கில், வாயில் ஊதாதீர்கள்!
பிறந்த குழந்தைக்கு மூக்கில் இருக்கிற சளியை வெளியே எடுக்கிறேன் என்று, மூக்கிலும் வாயிலும் ஊதுவார்கள் குழந்தையைக் குளிப்பாட்டுபவர்கள். குழந்தை தும்மல் போடுவதன் மூலமே சளி வெளியேறிவிடும் என்பதால், ஊதி எடுப்பது அவசியமில்லாத, பாதுகாப்பற்ற செயல். சிலர், குழந்தைக்கு தும்மல் வர வேண்டுமென்பதற்காக, மூக்கில் துணியைத் திருகி விடுவது, நூலை விடுவது என்று செய்வார்கள். தும்மல் என்பது அனிச்சை செயல். இதைச் செயற்கையாக வரவழைக்கக் கூடாது.