நாடான்ஸ் அணு உலை விபத்துக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
நாடான்ஸ் ஆலையின் ஒரு பகுதியில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டது. இதுகுறித்து ஈரான் கூறுகையில், ”பயங்கரவாத சதி காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கதிரியக்கக் கசிவு ஏதும் ஏற்படவில்லை. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை” என்று தெரிவித்தது.
இந்த நிலையில் இத்தாக்குதலை இஸ்ரேல்தான் நடத்தியுள்ளது என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவித் சாரீஃப் கூறும்போது, “பொருளாதாரத் தடைகளை நீக்குவதில் நாம் முன்னேறிக் கொண்டு இருப்பதால் இஸ்ரேலியர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வெளிப்படையாகப் பொருளாதாரத் தடைகளை நீக்கவிட மாட்டோம் என்று கூறி இருக்கிறார்கள். நாங்கள் நிச்சயம் பழிவாங்குவோம்” என்று தெரிவித்தார்.
அமெரிக்காவுடனான பேச்சிலிருந்து விலகி, இஸ்ரேலின் வலையில் விழ மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இக்குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.