இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பதவியென்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது தெரிவு செய்யக்கூடிய சாதாரண பதவியல்ல என்று, அக்கட்சியின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
தனியார்த் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று (11) இடம்பெற்ற நேரடி அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டிருந்த செந்தில் தொண்டமானிடம், இதொகாவின் தலைவர் யாரென்ற கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கான முழுமையான பதிலை வழங்க, அந்நிகழ்ச்சியில் போதுமான நேர அவகாசம் இருக்காத நிலையில், அது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில், செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எனும் ஸ்தாபனம், பல அடக்குமுறைகள், சதிகள், துரோகங்களை வென்றே, இன்று வரை செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.
“இந்நிலையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முழு அதிகாரம், கட்சியின் தேசிய சபைக்கே இருக்கிறது.
“இவ்வாறான நிலையில், இ.தொ.காவின் தலைவர் யாரென, சமீப காலமாகத் தொடர்ந்து என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது. அமரர் ஆறுமுகன் தொண்டமான் உயிரிழந்த போதே, இது, கட்சியின் தேசிய சபையினால் முடிவு செய்யப்பட வேண்டிய விடயம் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம். அவ்வாறு தேசிய சபை கூடாதிருக்கும் நிலையில், கட்சியின் தலைவர் யாரெனத் தொடர்ந்து கேட்டு வருவது, அவர்களின் நிகழ்ச்சி நிரலாகவே உள்ளதா எனும் கேள்வி எழுகிறது.
“இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எனும் பதவி, கட்சியின் மிக முக்கியமான பொறுப்பாகும். அதனை, ஜீவன் தொண்டமான் வகிக்கிறார். அந்தப் பதவியைப் போன்று மிக சக்திவாய்ந்த பதவிதான் தலைவர் பொறுப்பாகும். அந்த வகையில், தேசிய சபை தேர்ந்தெடுக்கும் பட்சத்திலும் காலி முதல் மொனராகலை வரையிலான அடிமட்டத் தொண்டர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு திறமையான நபர், கட்சியின் தலைவராக, கண்டிப்பாக ஒரு நாள் தேர்ந்தெடுக்கப்படுவார்.
“தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திகாம்பரமா என்று, அக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமாரிடம் நான் கேட்டால், அவருடைய பதில் என்னவாக இருக்குமோ, அவ்வாறே நானும் பதில் வழங்கியுள்ளேன். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் என்பதை, இலங்கையில் உள்ள அனைவரும் அறிவார்கள். இவ்வாறு இருக்கும் பட்சத்தில், அவர் அவ்வாறான கேள்வியொன்றை எழுப்புவது, வேலுகுமாரின் அரசியல் அறியாமையையே புலப்படுத்துகிறது.
“காங்கிரஸ் என்பது, ஒரு கூட்டுச் செயற்பாடாகும். அதிலுள்ள அனைவரையும், அமரர் ஆறுமுகன் தொண்டமான், தலைவர்களாகத்தான் உருவாக்கி இருக்கிறார். அதனால், அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் ஆளுமைமிக்க நபரொருவர், கண்டிப்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தமது மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டதென்று, இதொகா எடுத்த முடியற்சிகளுக்கு எதிராக, ஏப்ரல் 4ஆம் திகதி வரை கூவிக்கொண்டிருந்த தமிழ் அரசியல்வாதிகள், ஆயிரத்தை வழங்குவதற்கு 5ஆம் அனுமதி கிடைத்தவுடன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அந்த வெற்றியின் பங்காளர்களாக இணைந்து மார்தட்டிக்கொள்வது, அவர்களின் கீழ்த்தரமான அரசியல் செயற்பாட்டையே வெளிப்படுத்துகிறது” என, செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.