“வாழ்வதற்காக, அப்பாவி மக்களும் இளம்பெண்களும், குழந்தைகளும்கூட தங்கள் உயிரையும் பணயம்வைக்கிறார்களே… ஏன்? இந்த நிலைமை எங்காவது நடக்கிறது என்றால், உலகெங்கிலும் உள்ளவர்கள் ஒரு தீர்வைக் கண்டுபிடித்து அவர்களுக்கு உதவ முயல வேண்டும்.” – ஹான் லே
“இன்றிரவு நான் இந்த மேடையில் நிற்க, என் அன்பான மக்கள் எனக்காக மிகக் கடுமையாக உழைத்துள்ளனர். காரணம், என் நேசத்துக்குரிய நாடான மியான்மரில், தற்போது நிலவிவரும் சூழ்நிலையால் பெரும் அவதிப்பட்டுவரும் அவர்கள் சார்பாக, அவர்கள் அனுபவித்துவரும் `வலியையும் வேதனைகளையும்’ நான் இங்கு பேச வேண்டும் என்பதற்காக!
அங்கே தெரு வீதிகளில் தங்கள் உயிரை இழந்த என் மக்களுக்காக நான் வருந்துகிறேன். உலகின் ஒவ்வொரு குடிமகனும் தங்கள் நாட்டில் செழிப்பையும், அமைதியான சூழலையுமே விரும்புகிறார்கள். அப்படி இருக்கும்போது, சம்பந்தப்பட்ட தலைவர்கள் தங்களின் சுயநலத்துக்காக அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது’
வாழ்வதற்காக, அப்பாவி மக்களும் இளம்பெண்களும், குழந்தைகளும்கூட தங்கள் உயிரையும் பணயம் வைக்கிறார்களே… ஏன்? இந்த நிலைமை எங்காவது நடக்கிறது என்றால், உலகெங்கிலும் உள்ளவர்கள் ஒரு தீர்வைக் கண்டுபிடித்து அவர்களுக்கு உதவ முயல வேண்டும்.”
– இவையெல்லாம் எங்கோ ஓர் அரசியல் மேடையில் நின்றுகொண்டு, ஏதோ ஓர் அரசியல்வாதியோ அல்லது போராட்டக்குழுத் தலைவரோ பேசிய வார்த்தைகள் அல்ல!
தாய்லாந்தில் நடைபெற்ற `மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல்’ என்ற அழகிப்போட்டி மேடையில், 22 வயதான ஓர் இளம் மாடல் அழகி தனது மக்களுக்காக உதிர்த்த வார்த்தைகள் இவை! கண்களில் நீர் ததும்ப, `ஹான் லே’ பேசிய அந்த இரண்டு நிமிடப் பேச்சு உலகையே உணர்ச்சியில் உறையவைத்திருக்கிறது.
மியான்மர் நாட்டில், கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி வெற்றிபெற்று, ஜனநாயக தேசிய லீக் கட்சி ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி, 2021-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் அந்நாட்டு ராணுவம் ஆட்சியைக் கவிழ்த்து, அதிகாரத்தைக் கைப்பற்றியது. இதை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான மியான்மர் மக்கள் வீதியில் இறங்கிப் போராடிவருகின்றனர். ராணுவ ஆட்சிக்கு எதிரான இந்தப் போராட்டத்தில், இதுவரையில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் அந்நாட்டு ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 43 பேர் குழந்தைகள் என `சேவ் சில்ட்ரன்’ (Save Children) அமைப்பு தெரிவிக்கிறது.
இந்தநிலையில், யங்கூன் பல்கலைக்கழத்தின் பொருளாதார மாணவியும், மியான்மர் நாட்டின் இளம் அழகியுமான ஹான் லே-வின் பேச்சு உலக மக்களின் பார்வையை மீண்டும் மியான்மரின் பக்கம் திருப்பியுள்ளது. மேலும், அந்த மேடையில் ஹான் லே, “இந்த மேடையில் நான் இப்போது பேசிக்கொண்டிருக்கிறேன், இதேநேரம் என் நாட்டில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள். உயிரிழந்த அனைத்து மக்களுக்காகவும் நான் கண்ணீர் வடிக்கிறேன்” என்றார். கண்ணீரை இருத்திக்கொண்டே தொடர்ந்து “மியான்மர் மக்கள் ஜனநாயகத்துக்காக அங்கு வீதியில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். நானும் அந்த ஜனநாயகத்துக்காக இங்கு மேடையில் வேரூன்றியிருக்கிறேன்” என்றதும், அரங்கத்திலிருந்த பார்வையாளர்கள் அனைவரும் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்து ஹான் லே-வின் உரிமைக்குரலுக்காக தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.
என்ன நடக்கிறது அங்கே? எதனால் நடக்கிறது?
ஹான் லே தற்போது தனது தாய்நாடான மியான்மருக்குச் செல்ல முடியாது. அவரின் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன. அவர் மியான்மருக்குச் சென்றால் நிச்சயம் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார். ஏற்கெனவே கடந்த வாரம் மட்டும் ராணுவ ஆட்சிக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததற்காக பத்திரிக்கையாளர்கள் உட்பட 18 பிரபலங்கள் மியான்மர் பாதுகாப்பு படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், `அசிஸ்டன்ஸ் அசோசியேஷன் ஃபார் பொலிடிக்கல் பிரிஸனர்ஸ்’ (Assistance Association for Political Prisoners) என்ற அமைப்பு 2,500-க்கும் மேற்பட்டோர் ராணுவத்தால் சிறைவைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் தெரிவிக்கிறது.
இதற்கு முன்பாக ஹான் லே, யங்கூன் நகர தெருக்களில் ராணுவ ஆட்சிக்கு எதிராகக் களத்தில் இறங்கி போராடிக்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தன் நண்பர்கள், குடும்பம் மற்றும் மக்களின் அறிவுறுத்தலின் பேரில், அடுத்த சில மாதங்களுக்கு தாய்லாந்திலேயே தங்க முடிவெடுத்திருக்கிறார் ஹான் லே.
“அழகிகள் ஒவ்வொரு முறையும் புன்னைகைக்க வேண்டும். ஒவ்வொரு மக்களிடமும் தனிப்பட்ட முறையில் இணைந்திருக்க வேண்டும்! ஆனால், இப்போது என்னால் அது முடியாது! என் மக்கள் அங்கு இறந்துகொண்டிருக்கும்போது என்னால் இங்கு மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டிருக்க முடியாது” – என்ற ஹான் லே-வின் வார்த்தைகளை அவர் `மிஸ் கிராண்ட் மியான்மர்’ என்பதைத் தாண்டி `வாய்ஸ் ஆஃப் மியான்மர் சிட்டிசன்’ என்றே தற்போது உலகமக்கள் பார்க்கின்றனர்.
ஹான் லே அந்த மேடையில் தனது இறுதி வார்த்தைகளாகப் பதிவு செய்தவை, “நான் இங்கே சொல்ல விரும்புவது, (Please help Myanmar. We need your urgent international help right now). தயவுசெய்து மியான்மருக்கு உதவுங்கள்! உடனடியான சர்வதேச உதவி எங்களுக்குத் தேவை!”