மன்னார் மதவாச்சி பிரதான வீதி,முருங்கன் பொலிஸ் பிரிவில் உள்ள இசைமாலைத்தாழ்வு பகுதியில் இன்று சனிக்கிழமை மாலை சிறிய ரக மகிழுந்து விபத்திற்கு உள்ளாகியதில் அதன் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்னாரில் இருந்து மாதவாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த குறித்த சிறிய ரக மகிழுந்து இசைமாலைத்தாழ்வு பகுதியில் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
குறித்த வாகனத்தை செலுத்தி வந்த சாரதிக்கு நித்திரை தூக்கம் ஏற்பட்டமையினால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த பகுதியில் பிரதான வீதியின் இடது பக்கமுள்ள மரமொன்றுடன் மோதி தொடர்ந்து மற்றுமொரு பெரிய மரத்தில் மோதி மகிழுந்து நின்றுள்ளதாக விபத்தை நேரடியாக பார்த்த அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த விபத்தில் காயமடைந்த சாரதி மீட்கப்பட்டு மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக மேலதிக விசாரனைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-மன்னார் நிருபர்-