மணிவண்ணன் கைது அனைத்து தமிழ் மக்களிற்குமான எச்சரிக்கை. இது மணிவண்ணனுடன் நின்று விடப் போவதில்லை. இலங்கை ஆட்சியாளரின்
எதேச்சாதிகாரத்தையும் தமிழினத்தின் மீதான அவர்களின் குரூர உணர்வையும்
வெளிப்படுத்தி நிற்கிறது. இதற்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன்.
யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணனைக் கைது செய்தமை சட்டரீதியாகவோ அல்லது
தார்மீகரீதியாகவோ நியாயப்படுத்த முடியாததொன்று. பணியாளருக்கு வழங்கப்பட்ட
சீருடைகளின் நிறங்களை வைத்து அவர் புலிகளை மீளுருவாக்கம் செய்கிறார் எனக்
குற்றம் சுமத்துவது கேலிக்குரியது என்பதற்கப்பால் இலங்கை ஆட்சியாளரின்
எதேச்சாதிகாரத்தையும் தமிழினத்தின் மீதான அவர்களின் குரூர உணர்வையும்
வெளிப்படுத்தி நிற்கிறது.
முதல்வர் என்ற வகையில் உள்ளூராட்சிச் சட்ட விதிகளுக்கமைய மன்றத்தின் பணிகளிலொன்றை நிறைவேற்றுவதற்கு ஏலவே கொழும்பு மாநகரத்தின் பணியாளர்களால் பயன்படுத்தப்படும் சீருடையை ஒத்த உடையைத் தெரிவு செய்தமை எவ்வாறு தவறாக அமையும்.
அத்துடன் அதையொத்த நிறத்திலான சீருடைகள் வேறு துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கப்பால் புலிகள் பயன்படுத்தினார்கள் என்பதற்காக அவ்வாறான நிற உடைகளைப் பயன்படுத்துவோர் பயங்கரவாத்த்துக்குத்
துணை போவோர் என முடிவு செய்வது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சுப் போடுவது போன்றதாகும்.
உண்மையில் முதல்வரின் கைது அரச அடக்குமுறையின் வெளிப்பாடு. பாசிசத்தின் மறுவடிவம். நாட்டின் வருங்கால ஆட்சி வடிவத்துக்கான ஓர் எதிர்வு கூறல். இனவாதத்தை விதைத்து ஆட்சியைக் கைப்பற்றிய ஆட்சியாளர் சரிந்து போகும் தமக்கான மக்கள் செல்வாக்கை தூக்கிநிறுத்த எடுக்கும் தொடர் முயற்சிகளில் இதுவும் ஒன்று.
இது தனியே மணிவண்ணனுடன் நின்று விடப்போவதில்லை. எங்கள் ஒவ்வொருவருக்குமான எச்சரிக்கை. இதனை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன் உடனடியாக முதல்வரை விடுவிக்க வலியுறுத்துகிறோம்.
இதேவேளை சரிந்து போகும் தமது செல்வாக்கை ஆட்சியாளர் தூக்கிநிறுத்தவதற்கு
வாய்ப்புகளை வழங்காத வகையில் தமது பேச்சும் செயலும் அமைவதை எமதுமக்கள் பிரதிநிதிகள் உறுதிப்படுத்திக் கொள்வது எம்மக்களுக்கும் அவர்களின் எதிர்கால
அரசியலுக்கும் துணைசேர்க்கும்.