யாழ்ப்பாண மாநகர சபையின் அதிகாரம் சார் விடயத்தை நிர்வாக ரீதியாக அணுகுவதை விடுத்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் பொலிஸாரைக் கொண்டு அணுகுவது உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை அச்சுறுத்தி மட்டுப்படுத்தும் முயற்சியாகும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளார் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர், யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளமையை ஜனநாயக மறுப்பாகவும் அதேவேளை பகிரப்பட்ட அதிகாரங்களின் பிரகாரம் உள்ளுராட்சி மன்றங்கள் இயங்க முடியாது. வெறுமனே ஓர் திணைக்களம் போல் இயங்குக என மத்திய அரசினால் விடுக்கப்படும் அச்சுறுத்தலாகவுமே பார்க்கமுடிகின்றது. இக் கைது உள்ளிட்ட அண்மைக்காலமாக உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மீது முடுக்கி விடப்பட்டுள்ள பொலிஸ் விசாரணைகள் ஜனநாயக ரீதியில் மக்கள் ஆணை வழங்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட சபைகள் தமது கருமங்களை மேற்கொள்ள முடியாது என அடக்குமுறைக்குள்ளாக்கும் முயற்சியாகும்.
உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாக விடயங்களில் மாகாண சபைகளுக்கு மேற்பார்வை செய்வதற்கான வழிவகைகள் உள்ளன. மாகாண உள்ளூராட்சி அமைச்சர் பதவியில் இல்லாத நிலையில் ஆளுநரின் அதிகாரம் ஊடாக மாநகரசபைக்கு மேற்படி விடயத்தில் உள்ள அதிகார வரம்பு பற்றி ஆராய்ந்திருக்கலாம். கொழும்பு மாநகர சபை இவ் விடயத்தில் ஒத்தவிடயங்களை நடைமுறைப்படுத்தியிருந்ததை நான் அச் சபையின் முன்னாள் உறுப்பினர் என்றவகையில் அனுபவ ரீதியில் அறிந்திருக்கின்றேன். கொழும்பு மாநகர சபையில் நடைமுறைப்படுத்தப்படும் விடயம் ஒன்றை யாழ் மாநகர சபை நடைமுறைப்படுத்த முடியாது என்பது சர்ச்சைக்குரியது. மேற்படி விடயத்திற்கு உப விதிகள் தேவைப்பட்டால் அதனை மாநகரசபையினால் உருவாக்கமுடியும். புலிகளின் காவல்துறை சீருடையின் வடிவத்தை ஒத்த ஆடையமைப்பை யாழ் மாநகரசபை பயன்படுத்தியது என கூறுவதாயின் கூட அரசு எப்போது காவல்துறை சீருடையை அடையாளப்படுத்தி தடை ஒன்றைப்பிறப்பித்தது என்ற கேள்வி உள்ளது.
அடிப்படையில் மத்திய அரசாங்கம் ஜனநாயகக் கட்டமைப்பில் குறைந்தது உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரப்பகிர்வைக்கூட ஏற்றுக்கொள்ளத்தயாரில்லை என்பதையே இக் கைது காட்டுகின்றது. மக்களால் தேர்தல்களில் ஆணை வழங்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சிக் கட்டமைப்பினை முடக்கவேண்டுமாயின் அது உள்ளூராட்சி அமைச்சருக்கிருக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி சபைகளைக் கலைக்க முடியும். அரசு டம்மியாக உள்ளுராட்சி மன்றங்களை அடக்கிவிட எத்தனிப்பது ஜனநாயக விரோதமானது.
முதல்வர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டதன் வாயிலாக விடுக்கப்படும் அச்சுறுத்தல் பாரியது. உலகளவில் மிலேச்சத்தனமான சட்டம் என மனித உரிமை ஆர்வலர்களால் விமர்சிக்கப்படும் கொடுங்கோல் சட்டம் அதிகார பிரச்சினை சார்ந்த ஓர் விடயத்திற்கு பிரயோகிக்கப்பட்டுள்ளமை ஏறறுக்கொள்ளமுடியாதது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.