யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தின் காணி உரிமை யாழ் மாநகரசபையிடம் இல்லை என யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
அத்துடன், மத்திய பேருந்து நிலையத்தை ஒப்பந்தத்தின் மூலம் பெற்று, புனரமைக்கப்பட்ட பின்னர் மீள கையளிக்க தயாராக இருப்பதாகவும் அறிவித்தார்.
இலங்கை போக்குவரத்துசபையின் வடக்கு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளிற்கும், யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணனிற்குமிடையில் இன்று (8) இடம்பெற்ற கலந்துரையாடலில் இதனை தெரிவித்தார்.
யாழ் மத்திய பேருந்து நிலையத்தை புனரமைப்பிற்காக கையகப்படுத்துவதுடன், பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து நிலையத்தில் இணைந்த சேவை அட்டவணையின் பிரகாரம் இ.போ.சவும் சேவையில் ஈடுபட வேண்டுமென யாழ் முதல்வர் அழுத்தம் கொடுத்து வந்தார்.
அத்துடன், மத்திய பேருந்து நிலையத்தில் சேவையில் ஈடுபட்ட இ.போ.ச பேருந்துகளை, தனியார் பேருந்து நிலையத்திற்கு அனுப்ப பொலிசாரின் துணையையும் நாடியிருந்தார்.
இந்த நிலையில் இரு தரப்பிற்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, இ.போ.ச தொழிற்சங்கங்கள் தமது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்தனர். தனியார் பேருந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபட மாட்டோம் என்பதையும் தெரிவித்தனர்.
இரு தரப்பினரும் ஒரே இடத்திலிருந்து சேவையில் ஈடுபடுவது தனது நிலைப்பாடல்ல என்பதை மணிவண்ணன் தெரிவித்தார்.
மத்திய பேருந்து நிலையத்தின் காணி உறுதிப்பத்திரம் தம்மிடமில்லை என்பதை முதல்வர் ஏற்றுக்கொண்டார்.
மத்திய பேருந்து நிலையத்தை புனரமைப்பதற்காகவே இ.போ.சவினரை வேறிடத்தில் சேவையில் ஈடுபட கோருவதாகவும், மத்திய பேருந்து நிலையத்தை பெற்று புனரமைப்பின் பின் மீள கையளிப்பது தொடர்பில் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
தொழிற்சங்கங்களும் இதனை ஏற்றுக்கொண்டன.
அடுத்த சில நாட்களில் ஒப்பந்தம் தயாராக பின்னர் மாநகரசபை- இ.போ.ச பிரதிநிதிகளும் அதில் கையொப்பமிடுவார்கள்.
மத்திய பேருந்து நிலையம் புனரமைக்கப்பட்டு, இ.போ.சவிடம் மீள கையளிக்கப்படும் வரையான காலப்பகுதியில், யாழ்ப்பாணம் கோட்டைக்கு அண்மையில் தற்காலிய பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. யாழ் மாநகரசபை இதற்கு நிதியளிக்கும்.
தூர இடங்களிற்கான பேருந்து சேவையை பண்ணையிலிருந்து- தனியாருடன் இணைந்து- மேற்கொள்ளுமாறு தான் கூற மாட்டேன் என்றும், அதை நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் இ.போ.சவினர் பேசி செயற்படுமாறும் தெரிவித்தார்.