யாழ் நகரில் மூடப்பட்ட கடைகள் நாளை திறக்கப்படும் என தெரிவித்துள்ள மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தற்காலிகமாக 75 இற்கும் மேற்பட்ட கடைகள் திறக்க அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மாநகர சபையில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ் நகர வர்த்தகநிலையங்களை திறப்பது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பூட்டப்பட்டுள்ள யாழ் வர்த்தக நிலையங்களில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை என்றும் ஏனைய கடைகளை நாளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் வர்த்தகர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று மாலை ஒரு தொகுதியினருக்கு வரவிருக்கின்றதால் அந்த முடிவுகளின் அடிப்படையில்தான் வர்த்த நிலையங்கள் திறக்கப்படுவது குறித்து உத்தியோகபூர்வமான இறுதி அறிவிப்பு வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வரையில் 75 வர்த்தக நிலையங்கள் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட மாட்டாது என்றும் மேற்படி பிசிஆர் முடிவு அறிவிப்புக்களில் எவருக்கேனும் தொற்று இருந்தால் அந்த வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட மாட்டாது என்றும் ஏனைய வர்த்தக நிலையங்கள் அனைத்தும் நாளை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.