இலங்கை முஸ்லிங்கள். ஊழல் மோசடி, பயங்கரவாதம், போதைப்பொருள் போன்றவற்றுக்கு எதிரானவர்களாக முஸ்லிங்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது துரதிஷ்டவசமாக முஸ்லிம் பெயர்களையுடைய சிறிய குழுவினர் செய்த நாசகார வேலையினால் இலங்கையில் வாழும் 20 லட்சத்துக்கும் அதிகமான முஸ்லிங்கள் தலைகுனிவை சந்தித்துள்ளனர். மட்டுமன்றி இதன் பிரதிபலிப்பாக கம்பஹா, குருநாகல், புத்தளம் போன்ற மாவட்டங்களில் நடைபெற்ற வன்செயல்களினால் முஸ்லிங்களின் பள்ளிவாசல்கள் தீக்கிரையாக்கப்பட்டு முஸ்லிங்களின் உடமைகள், சொத்துக்கள் அழிக்கப்பட்டது வரலாறு என முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் மௌலவி ஐ.எம்.எம்.மிப்ளால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில்,
கிறிஸ்தவ மக்களை குறிவைத்து உயிர்த்த தின ஆராதனையில் தாக்குதல் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ளது. இதை அடையாளப்படுத்தி துக்க தினங்கள் அனுஷ்டிக்கப்படுகிறது, கருப்பு ஞாயிறு அனுஷ்டிக்கப்படுகிறது மாத்திரமின்றி ஜனாதிபதி, பிரதமர், எதிர் கட்சி தலைவர், அரசியல்வாதிகள், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் அனுதாப செய்திகளை வெளியிடுகிறார்கள். அதற்கு மேலதிகமாக முஸ்லிம் சமூகமும் கிறிஸ்தவ மக்களின் மனதை வெல்ல பல்வேறு செயற்பாடுகளையும் செய்து வருகிறார்கள்.
இந்த உயிர்த்த தின ஆராதனை தாக்குதல் இலங்கையில் வாழும் கிறிஸ்தவர்களினது மட்டுமல்ல இலங்கையர்கள் எல்லோரது மனதையும் வெகுவாக பாதித்தது. 260 பேரளவில் உயிரிழந்தும், 500 க்கு மேற்பட்டோர் காயமடைந்தும் பலத்த வேதனையை இந்த சம்பவம் உண்டாக்கியது. ஆனாலும் இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் கிறிஸ்தவ மக்களை விட முஸ்லிங்களே அதிகம். ஏனெனில் இந்த நாட்டில் பல ஆயிரக்கணக்கான வருடங்கள் இந்த நாட்டின் இறையாண்மை, கௌரவம், வளர்ச்சி என்பவற்றை உயர்த்த பெரியளவில் செல்வாக்கு செலுத்தியவர்கள் முஸ்லிங்கள்.
இந்த தாக்குதலை காரணமாக கொண்டு இந்த நாட்டில் உருவாகும் அரசாங்கங்கள் முஸ்லிங்களின் மதரஸாக்கள், பெண்களின் உடை மீதான தடை, பாட புத்தங்களில் திருத்தம், தனியார் சட்டத்தில் மாற்றம் போன்ற அடிப்படை உரிமைகளில் கைவைத்து நடவடிக்கைகளை செய்துவருவதை காண்கிறோம். இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மை சமூகம் முஸ்லிங்களை சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் கிறிஸ்தவ சகோதர்கள் உடல்ரீதியாக அனுபவித்த துன்பங்களை விட இஸ்லாமிய சமூகம் உளரீதியாக அனுபவித்த துன்பங்கள் அதிகம். இந்த நாசகார வேலைகளை பின்னணியில் இருந்து செய்தவர்கள் யார் என்பதை கார்த்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் அறிவதை விட பலமடங்கு அறிந்துகொள்ள முஸ்லிம் சமூகமே ஆவலாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.