ஜனநாயக ரீதியாக செயற்பட்ட அமைப்புக்களை தடை செய்தமை குறித்து இலங்கை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா மன்ற தலைவர் இரா.துரைரெட்ணம் வலிறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனநாயக ரீதியாக இயங்கும் அமைப்புக்கள் தமிழர்களாக இருந்தால், அவ்வமைப்புக்கள் குறித்து இலங்கை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.
மேலும் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
அத்துடன் தற்போதைய அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்கள் வெளியிடும் கருத்துக்கள், இன முரண்பாட்டை ஏற்படுத்தக்கூடிய வகையில் காணப்படுகின்றது. ஆகவே அவை தொடர்பாகவும் ஜனாதிபதி பரிசீலனை செய்ய வேண்டும்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் மணல் அகழ்வுக்கு, அனுமதி வழங்குகின்ற நிர்வாக முறைகள் பரிசீலனை செய்யப்பட்டால் மாத்திரமே சட்டவிரோத மணல் அகழ்வினை தடுத்து நிறுத்த முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.