முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணை முறி ஏலத்தின் போது 36.98 பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய பிணை முறிகளை தவறாக பயன்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி தலா 10 இலட்சம் பெறுமதியான பிணையிலும், 50 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் சந்தேக நபர்களை விடுவித்துள்ளது.
சந்தேக நபர்களின் வெளிநாட்டு பயணங்களையும் தடை செய்துள்ளதுடன் இது தொடர்பில் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கும், விமான நிலைய அதிகாரிகளுக்கும் அறியப்படுத்துமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீண்டும் இந்த வழக்கு மே மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2016 மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற மத்திய வங்கியின் பிணைமுறி ஏலத்தின் போது 15 பில்லியன் ரூபா பெறுமதியான முறிகளை முறையற்ற விதத்தில் கையாண்டதாக தெரிவித்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
அமல் ரணராஜா, நாமல் பலல்லே மற்றும் ஆதித்யா பட்டபெந்திகே ஆகிய நீதிபதிகள் அடங்கிய குழாமால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தலா 10 இலட்சம் பெறுமதியான பிணையிலும், 100 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் சந்தேக நபர்களை விடுவித்த நீதிமன்றம், சந்தேக நபர்களின் வெளிநாட்டு பயணங்களையும் தடை செய்துள்ளது.
இது தொடர்பில் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கும், விமான நிலைய அதிகாரிகளுக்கும் அறியப்படுத்துமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு தவணைகளுக்கு கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் அவ்வாறு வழக்குகளை தவற விட்டால் வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் இருக்க வேண்டி ஏற்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீண்டும் இந்த வழக்கு இந்த மாதம் 29 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.