மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் பெரும் மதிப்புக்குரிய ஆயர்
இராயப்பு சோசேப்பு அவர்களின் மறைவு ஆன்மீகத்திற்கு மட்டுமன்றி
இனத்திற்கும் பேரிழப்பு. மறைந்த ஆயர் அவர்கள் ஆன்மீகத்தின் குரலாக
மட்டுமன்றி ஒடுக்கு முறைக்குள்ளான இனத்தின் குரலாகவும் ஒலித்தவர். இன்று
அந்த குரல் ஓய்ந்துவிட்டது என சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமார் தனது இரங்கல்
செய்தியில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
மன்னார் மறை மாவட்டத்தில் ஆயராக அவர் பணியாற்றியக் காலத்தில் ஆன்மீகப்
பணிகளுக்கு அப்பால் பலவிதமான மனிதாபிமான பணிகளில் அதிக அக்கறையோடு
செயற்பட்டுள்ளார். முக்கியமாக ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ்
இனத்தின் பலமான குரலா ஒலித்தவர். இனம் சார்ந்து உண்மைகளை சர்வதேசம்
வரை கொண்டு சென்ற ஒரு சக்திமிக்க குரல் ஒய்ந்து விட்டது. இவரின் இழப்பு
கிறிஸ்தவ மக்களுக்கு மட்டுமன்றி தமிழ் இனத்திற்கும் பேரிழப்பாகும் என தெரிவித்துள்ளார்.