ஹொங்கொங் சட்டமன்ற தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வந்துள்ள சீனா, மக்களால் தேர்வு செய்யப்ப. இதற்கு ஹொங்கொங் மக்களும், உலக நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
சீனாவிடமிருந்து ஜனநாயக உரிமைகள் கோரி ஹொங்கொங்கில் நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஹொங்கொங் மீதான தனது பிடியை இறுக்கும் விதமாக சீனா அங்கு சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை கடந்த ஆண்டு அமல்படுத்தியது.
ஹொங்கொங்கில் சட்டமன்றம் மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்டது. அதில் 35 பேர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர். 30 பேர் ஹொங்கொங்கை சேர்ந்த வணிகர்கள், வங்கி அமைப்பு போன்றவர்களை கொண்ட குழுக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்கள் சீனாவின் ஆதரவாளர்களாகவே இருப்பார்கள். எஞ்சிய 5 பேர் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட கவுன்சிலர்களாக இருப்பர்.
இந்த முறையை முற்றிலும் மாற்றி சட்டமன்றத்தில் சீன ஆதரவு உறுப்பினர்களின் எண்ணிக்கையை பெருமளவு உயர்த்த தேர்தல் முறை மாற்றியமைக்கும் பணிகளில் சீனா இறங்கியது.
அதன்படி கடந்த மாத தொடக்கத்தில் சீன ஜனாதிபதி ஜின்பிங் தலைமையில் நடைபெற்ற தேசிய நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, ஹொங்கொங் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வருவதற்கான வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இது ஹொங்கொங்கின் ஜனநாயகத்தை முற்றிலுமாக சிதைக்கும் நடவடிக்கை என அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் சீனாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்தநிலையில் ஹொங்கொங் தேர்தல் முறையை மாற்றியமைக்க ஹொங்கொங் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக சீன நாடாளுமன்ற நிலைக்குழு வாக்கெடுப்பை நடத்தியது. இதில் நாடாளுமன்ற நிலைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் ஹொங்கொங் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவருவதற்கு ஒப்புதல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து உடனடியாக அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு தேர்தல் முறை மாற்றி அமைக்கப்பட்டது.
ஹொங்கொங் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 70இல் இருந்து 90 ஆக உயர்த்தப்படுகிறது; மக்களால் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பாதியாக, அதாவது 35இல் இருந்து 20 ஆக குறைக்கப்படுகிறது; தேர்தலுக்கு முன் வேட்பாளர்களை சரிபார்க்கும் பணியை மேற்கொள்ள குழு ஒன்று அமைக்கப்படும், என்பன போன்ற பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த மாற்றங்கள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு ஹொங்கொங்கின் ஜனநாயக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது அங்கு போராட்டத்துக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.