சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நீதி வழங்க, ஆளுங்கட்சிக்குள் தனிப்பட்டரீதியில் முன்மொழிவொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (31) தெரிவித்தார்.
ரஞ்சன் ராமநாயக்க மீது நுகேகொட நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவதூறு வழக்கையும் இன்று அளுத்கமகே வாபஸ் பெற்றார். 2016 ஊடக சந்திப்பொன்றில் தன் மீது அவதூறு தெரிவித்ததாக, இந்த வழக்கை தொடர்ந்திருந்தார்.
பின்னர் ஊடகங்களிடம் பேசிய போது, மேற்படி அறிவிப்பை விடுத்தார்.
ரஞ்சன் ராமநாயக்கவை மற்றவர்கள் தவறாக வழிநடத்தியதாக மகிந்தானந்த தெரிவித்தார்.
“அவர் ஒரு அப்பாவி நபர், அவர் தவறாக வழிநடத்தப்பட்டு மற்றவர்களால் பயன்படுத்தப்பட்டார்” என்று அமைச்சர் கூறினார்.
அவரை தவறாக வழிநடத்தியதால், இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை பிரதிநிதித்துவப்படுத்த யாரும் இல்லாததால் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கை வாபஸ் பெற முடிவு செய்ததாக தெரிவித்தார்.
நல்லாட்சி காலத்தில் தன்னை மிகவும் தாக்கிய ரஞ்சனிற்கு மன்னிப்பு வழங்கி, அரசியல் பழிவாங்கலை தொடராமல் விடுவதன் மூலம் நாட்டிற்கு ஒரு முன்மாதிரியை வைப்பதாகவும் தெரிவித்தார்.
ரஞ்சன் ராமநாயக்க மீதான வழக்கை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிற்கும் தெரிவித்ததாகவும், யாரையும் அவர் பழிவாங்க விரும்பவில்லையென்றும் தெரிவித்தார்.