இங்கிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் இறுதி ஒரு நாள் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் புனேயில் நடந்து வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ரோகித் 6 பவுண்டரிகளை விளாசினார். அவரது ஆட்டத்தில் சிக்சர்கள் வரவில்லை. 37 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ரஷீத் பந்து வீச்சில் போல்டானார்.
ஆனால், மறுபுறம் ஷிகர் தவான் அதிரடியாக 10 பவுண்டரிகளை விளாசி தள்ளி அரை சதம் கடந்துள்ளார். 67 ரன்களில் ரஷீத் பந்து வீச்சில் அவரிடமே கட்ச் கொடுத்து வெளியேறினார்.
கடந்த 2 ஆட்டங்களிலும் அரை சதம் கடந்து அதிரடி காட்டிய கோலி மற்றும் ராகுல் இந்த ஆட்டத்தில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அவர்கள் இருவரும் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடந்த ஆட்டத்தில் அரை சதம் அடித்த ரிஷாப் பண்ட் இந்த ஆட்டத்திலும் சிறப்புடன் விளையாடினார்.
அவர் 5 பவுண்டரிகளுடன் 4 சிக்சர்களையும் பறக்க விட்டார். எனினும், 78 ரன்களில் கர்ரன் பந்து வீச்சில் பட்லரிடம் கட்ச் ஆனார். ஹர்தீக் பாண்ட்யாவும் அரை சதம் எடுத்துள்ளார். அவர் 64 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் போல்டானார்.
இந்திய அணியில் 3 வீரர்கள் அரை சதம் அடித்து அதிரடி ஆட்டம் வெளிப்படுத்தி உள்ளனர். பின்பு குருணல் பாண்ட்யா (25), ஷர்துல் தாக்குர் (30), புவனேஷ்வர் (3), பிரசீத் கிருஷ்ணா ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். நடராஜன் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதனால், இந்திய அணி 48.2 ஓவர்களையும் இழந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்களை சேர்த்து உள்ளது. இங்கிலாந்து வெற்றி பெற 330 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ சொற்ப ரன்களே எடுத்து புவனேஷ்வர் குமார் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். ராய் (14) போல்டானார். பேர்ஸ்டொ (1) எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேறினார்.
இதன்பின்னர் சற்று கவனமுடன் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 35 ரன்களில் தவானிடம் கட்ச் ஆனார். இதனால் இங்கிலாந்து அணி 11 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் எடுத்து திணறியது.
அதன்பின்பு விளையாடிய டேவிட் மலான் 6 பவுண்டரிகளுடன் அரை சதம் (50) விளாசினார். பட்லர் (15), லிவிங்ஸ்டன் (36), மொயீன் அலி (29) மற்றும் ரஷீத் (19) ரன்களில் ஆட்டமிழந்தனர். மார்க் வுட் 14 ரன்களில் ரன் அவுட்டானார். ஆனால், சாம் கர்ரன் அதிரடியாக விளையாடி 9 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசினார். 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதேபோன்று ரீசி டாப்ளே (1) ரன்கள் எடுத்துள்ளார்.
50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு இங்கிலாந்து அணி 322 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், 2-1 என்ற புள்ளி கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றி உள்ளது.