வஹாப் வாதம் அல்லது கலிபா ஆட்சியை இலங்கையில் கொண்டுவர வேண்டுமென்ற நோக்கில் ஒரு சிறிய அளவிலான இளைஞர் குழுவொன்று நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்புத் தஹரி போன்ற அமைப்புகள் மாற்றுப் பெயரில் இங்கு இயங்குகின்றன. இது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரக்காந்தன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்புவேளை பிரரேரணை மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
வஹாப் வாதம் அல்லது கலிபா ஆட்சியை கொண்டுவர வேண்டுமென்ற நோக்கில் ஒரு சிறிய அளவிலான இளைஞர் குழுவொன்று நாட்டில் உருவாக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு உருவாகியுள்ள சிறிய கூட்டத்தை சரியாக கையாள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குள்ளது. அதற்காக ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் வெறுக்கத்தக்க சம்பவங்கள் இடம்பெற்றுவிடக்கூடாது.
தீவிரவாத அமைப்புகளாக ஆப்கானிஸ்தானில் தலிபான்களும், பங்களாதேஷில் ஜனார்த்துல் முஜார்தின் அமைப்பும், பாகிஸ்தானில் ரஸ்டர்ஐ தலிபா அமைப்பும் மலேசியாவில் இஸ்பூத் தஹரி அமைப்பும் இயங்குகின்றன. மலேசியாவில் உள்ள இஸ்பூத் தஹரி போன்ற அமைப்புகள் இலங்கையிலும் பெயர்மாற்றம் செய்யப்பட்டு இயங்குகிறன்றன. இதில் இலங்கையில் உள்ள படித்த முஸ்லிம்களும் உள்வாங்கப்பட்டு இயங்குகிறது. இந்த விடயம் மிகவும் கவனமாக இலங்கையில் கையாளப்பட வேண்டும்.
இக்குழுக்களில் நேரடியாகவோ மறைமுகமாகவே ஈர்ப்புச் செய்யப்பட்டவர்களை வெளியில் எடுக்க வேண்டும். இலங்கை என்பது பல இனம், மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். இங்கு கலிபா ஆட்சியை ஏற்படுத்த முடியாது. இதற்கு எதிரான செயற்பாடுகளுக்காக ஜம்இய்யதுல் உலமா சபை போன்ற பொதுவான அமைப்புகள் முன்வர வேண்டும்.
ஆனால், இஸ்லாமிய அமைப்புகள் இப்பொழுதும் வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருக்கின்றன. ஆகவே, பொறுப்பான அரசாங்கம் என்ற வகையில் இந்த செயற்பாட்டின் பின்புலத்தை ஆராய்ந்து எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வண்ணம் ஒரு சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.