மியன்மாரில் ஆர்ப்பாட்டம் செய்ததற்காக தடுத்து வைக்கப்பட்ட 600 பேரை இராணுவ ஆட்சியாளர்கள் நேற்று விடுதலை செய்ததாக மூத்த சிறைத்துறை அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
“இன்செய்ன் சிறைச்சாலையில் இருந்து புதன்கிழமை 360 ஆண்களையும், 268 பெண்களையும் விடுதலை செய்துவிட்டோம்“ என்று சிறை அலுவலகத்தில் இருந்து அவர் கூறியதாக ஏஎஃப்பி குறிப்பிட்டது. இருப்பினும் அந்த அதிகாரி யார் என்ற விவரம் வெளியிடப்படடவில்லை.
இதற்கிடையே, இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தைத் தொடர மக்கள் முடிவு செய்துள்ளனர். ஏழு வயதுப் பெண் குழந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் வீடுகளில் இருந்தவாறும் வர்த்தக நிறுவனங்களின் கதவுகளை மூடியும் அமைதி வழிப் போராட்டத்தை தொடர முடிவு செய்திருப்பதாகவும் ஏஎஃப்பி தெரிவித்துள்ளது.
மாண்டலே நகரில் ஆர்ப்பாட்டக்காரர்களை வீடு வீடாகத் தேடிச் சென்ற பாதுகாப்புப் படையினர் ஒரு வீட்டின் கதவை எட்டி உதைத்து துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டனர். அந்த வீட்டுக்குள் தமது தந்தையின் மடியில் அமர்ந்திருந்த சிறுமி துப்பாக்கித் தோட்டாவுக்குப் பலியானார். பின்னர் அவரது தந்தை மீதும் அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவரது மூத்த மகள் கூறியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது.
பெப்ரவரி 1ஆம் திகதி இராணுவம் ஆட்சிக்கவிழ்ப்பை நடத்திய பின்னர் அங்கு கொல்லப்பட்டுள்ள ஆகக் குறைந்த வயதுடையவர் இச்சிறுமிதான். இந்தக் கொடூரச் செயலுக்கு உலக அளவிலான கண்டனங்கள் வலுத்து வருகிறது.