இந்தியாவில் 18 மாநிலங்களில் இரட்டை உருமாற்ற கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் காணப்படும் வேறு பல உருமாற்ற வைரஸ்கள் இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்கள் பரவலை அதிகப்படுத்தலாம் அல்லது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்துவிடும் தன்மையோடும், தீவிரமான நோய்களை உருவாக்கும் தன்மையோடும் தொடர்புடையவை.
ஆனால் மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா வைரஸ் அதிகரிப்புக்கும், இந்த இரட்டை உருமாற்ற கொரோனா வைரஸ் இருப்பதற்கும் தொடர்பில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் குறித்த மரபணு வரிசை மற்றும் தொற்றுநோய் தொடர்பான தொடர் ஆய்வுகள் மூலம்தான் இதைக் கண்டறிய முடியும் எனத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த வாரத்திலிருந்து கொரோனா பாதிப்பு நாள்தோறும் 40 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்து வந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 47 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் கொரோனா வைரஸ் 2வது அலை உருவாகிவிட்டதா என்ற அச்சம் எழுந்தது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று ஓர் அறிவிப்பு வெளியிட்டது.
அதில் கூறியிருப்பதாவது:
“இந்தியாவில் கொரோனா வைரஸ் மற்றும் மற்றொரு வகையான இரட்டை உருமாற்றம் அடைந்த வைரஸ் 18 மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை வைரஸ்கள் வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை வைரஸ் அதிகமான அளவு கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த வைரஸுக்கும், பல மாநிலங்களில் வேகமாக கொரோனா வைரஸ் பரவுவதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. கொரோனா வைரஸ் குறித்த மரபணு வரிசை மற்றும் தொற்றுநோய் தொடர்பான தொடர் ஆய்வுகள் மூலம்தான் இதைக் கண்டறிய முடியும்.
மகாராஷ்டிராவில் எடுக்கப்பட்ட மாதிரிகளை எடுத்து, கடந்த 2020, டிசம்பர் மாதம் எடுக்கப்பட்ட மாதிரிகளுடன் ஒப்பிடும்போது, கொரோனா வைரஸ் உருமாற்றம் அதிகரித்துள்ளது. இந்த வகை வைரஸ்கள் மனித உடலில் செல்லும்போது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்துவிடும், அல்லது நோய் எதிர்ப்பு சக்தி செல்களை செயலிழக்கச் செய்துவிடும்.
15 முதல் 20 சதவீதம் மாதிரிகளில் இந்த உருமாற்றம் காணப்படுகிறது. இந்த மாதிரிகள் ஏற்கெனவே இருந்த வைரஸ்களின் மாதிரிகளுடன் ஒத்துப்போகவில்லை.
ஆதலால், இந்த வைரஸ் பரவலைத் தடுக்க பரிசோதனை அளவை அதிகப்படுத்த வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைக் கண்காணிக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்த வேண்டும். அவர்களுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.
கேரளாவில் 14 மாவட்டங்களில் இருந்து 2,032 மாதிரிகள் எடுக்கப்பட்டு, வகைப்படுத்தப்பட்டது. அதில் 11 மாவட்டங்களில் எடுக்கப்பட்ட 123 மாதிரிகளில் என்440கே வகை வைரஸ்களோடு தொடர்புடையதாக இருப்பது தெரியவந்தது.
இதேபோன்ற வைரஸ்கள் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் காணப்பட்டது. இதேபோன்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்கள், பிரிட்டன், டென்மார்க், சிங்கப்பூர், ஜப்பான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட 16 நாடுகளில் காணப்பட்டன. ஆதலால், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்கள் குறித்து அதிகமான ஆய்வுகள் அவசியம் தேவை.
10,787 மாதிரிகளில் பிரிட்டனோடு தொடர்புடைய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் 736 பேருக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, தென்னாபிரிக்காவில் காணப்படும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் 34 பேருக்கும், பிரேசில் நாட்டு கொரோனா வைரஸ் ஒருவருக்கும் இருப்பது தெரியவந்துள்ளது“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.