யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக பந்தலமைத்து உட்கார்ந்திருக்கும் கும்பலிற்கு, பொலிசார் முழுமையான ஒத்தாசை வழங்குவதாக மாநகரசபை வட்டாரங்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
இராணுவத்தின் ஏற்பாட்டில் ஒரு குழு, நல்லூரடியில் பந்தல் அமைத்து உட்கார்ந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தது. அங்கஜன் அணி, முன்னாள் ஆவா ரௌடியென அடையாளப்படுத்திய ஒருவர் உள்ளிட்ட குழுவே மேடையமைத்து உட்கார்ந்திருந்தது.
விடுதலைப் புலிகளினால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என எழுதிக் கொடுத்த பதாதையையும் அவர்கள் கட்டி வைத்திருந்தார்கள்.
அந்த குழு மேடையமைத்துள்ளது யாழ் மாநகரசபையினால் குத்தகைக்கு வழங்கப்படும் நிலம். ஏற்கனவே முன்பதிவு செய்த ஒருவருக்கு அந்த நிலத்தை விளம்பர நடவடிக்கைக்காக மாநகரசபை வழங்க வேண்டும். இந்த குழு சட்டவிரோதமாக மேடையத்த போதே, யாழ் மாநகரசபை பணியாளர்கள் அதை தடுத்தனர்.
எனினும், அந்த கும்பல் மிரட்டியதில், அவர்கள் பின்வாங்கி விட்டதாக மாநகரசபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, ஆணையாளர் தொலைபேசியில் ஏற்பாட்டாளரை அழைத்து, சட்டவிரோத பந்தல் அமைக்க வேண்டாம் என கூறியிருக்கிறார். எனினும், எகத்தாளமாக கதைத்த ஏற்பாட்டாளர், ஆளுனர் அலுவலகத்தின் முன்பாக பந்தல் அமைத்துள்ள சுகாதார தொண்டர்கள் அனுமதி பெற்றிருக்கிறார்களா என கேட்டார்.
சுகாதார தொண்டர்கள் முறைப்படியான அனுமதி பெற்றே அந்த பந்தல் அமைத்துள்ளனர். அதை ஆணையாளர் தெரிவித்தார். எனினும் ஏற்பாட்டாளர் அனுமதி பெற மறுத்து, முதல்வரில் தமக்கு நம்பிக்கையில்லையென கூறினார்.
எனினும், சட்ட விவகாரங்களில் அவருக்கு நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பதல்ல விவகாரம், அவர் முறைப்படி அனுமதி பெற வேண்டுமென்ற அடிப்படையான விடயத்தை ஆணையாளர் சொல்லிக் கொடுத்தார். இருந்தாலும், இதுவரை அவர்கள் அனுமதி பெறவில்லை.
இந்த விடயத்தை யாழ் மாநகரசபை ஆணையாளர் உடனடியாக, யாழ் பொலிஸ் நிலையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார். எனினும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
யாழ் மாநகரசபையின் அறிவித்தலை, உறுப்பினர் வ.பார்த்தீபன் நேற்று நேரில் சென்று வாசித்து காட்டினார். அதன் பிரதி யாழ் பொலிசாருக்கு அனுப்பப்பட்டு விட்டது. அதற்கும் பொலிசார் நடவடிக்கையெடுக்கவில்லை.
மாநகரசபையின் அவகாசம் முடிந்து விட்டது. ஆனால் அந்த குழு வெளியேறவில்லை. அவர்கள் அரசியல் பின்னணியில் உட்கார வைக்கப்பட்டுள்ளதால், யாழ் மாநகரசபை முதல்வரும் நடவடிக்கையெடுக்க தயங்குவதாக அறிய முடிகிறது.
தன்னை ஆவா குழுவின் முன்னாள் ரௌடியென குறிப்பிட்ட ஒருவரும் இருப்பதால், ஏதேனும் அசம்பாவிதம் பின்னர் இடம்பெற்றாலும் என்ற அச்சத்தில் மாநகரசபை ஊழியர்களும் மேடையை அகற்ற பின்னடிப்பதாக தெரிகிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் வாக்கெடுப்பு இன்று இரவு இடம்பெறுவதால், அந்த குழு நாளை வரை அங்கே உட்கார வைக்கப்படுமென தமிழ்பக்கம அறிந்தது.