யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த எம்.ஏ.சுமந்திரன் அணியின் கூட்டத்தை சி.சிறிதரன் புறக்கணித்துள்ளார். கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு எதிராக, எம்.ஏ.சுமந்திரன் தரப்பினர் மேற்கொண்ட இந்த நகர்வுக்கு கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.
கட்சி தலைமைக்கு தெரியாமல் நடக்கும் கூட்டமென்பதால், எம்.ஏ.சுமந்திரன்- சாணக்கியன் தரப்பினரின் கூட்டமென்பதால், கரவெட்டியில் இரண்டு கூட்டங்கள் இரத்து செய்யப்பட்டன.
சுமந்திரன் அணியினரால் தவறாக வழிநடத்தப்படுவதாக இரா.சாணக்கியனிற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்சியின் மட்டக்களப்பு பிரமுகர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் பலர் தொலைபேசி வழியாக சாணக்கியனை தொடர்பு கொண்டு அர்ச்சித்து வரும் சம்பவமும் நடந்துள்ளது.
சட்ட மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெறும் கூட்டமென தெரிவித்து, எம்.ஏ.சுமந்திரன் தரப்பினரால் யாழ் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் கூட்டமொன்று இடம்பெற்றது. இது எம்.ஏ.சுமந்திரன் அணியின் கூட்டமென ஏற்கனவே தமிழ்பக்கம் குறிப்பிட்டிருந்தது.
வரும் மாகாணசபை தேர்தலை இலக்கு வைத்தும், கட்சிக்குள் தம்மை பலப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட நடிவடிக்கை.
கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு நிகழ்விற்கான தகவல் கண்டிப்பாக கொடுக்கக்கூடாது என்பதில் ஏற்பாட்டாளர்கள் தரப்பில் உறுதியாக கூறப்பட்டிருந்ததை தமிழ்பக்கம் அறிந்தது.
மாகாணசபை தேர்தல் நெருங்கும் சமயத்தில் மாவை சேனாதிராசாவிற்கு நெருக்கடி கொடுக்கும் முடிவை ஏன் சுமந்திரன் எடுத்தார் என்பது பெரிய கதை. அதை பிறிதொரு செய்தியாக குறிப்பிடுகிறோம்.
பொதுத்தேர்தலின் முன்னரும் இப்படியாக கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும நடவடிக்கையை எம்.ஏ.சுமந்திரன் மேற்கொண்டிருந்தார்.
நேற்றைய கூட்டத்தின் ஏற்பாட்டில், மாவை சேனாதிராசா அழைக்கப்படாததை, இன்னொரு பேச்சாளராக குறிப்பிடப்பட்டிருந்த சி.சிறிதரன் ஏற்றுக்கொள்ளவில்லை. தான் கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட மாட்டேன், தமிழ் மக்களை மேலும் பிளவுபடுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டேன் என அவர் தெரிவித்ததாக அறிய முடிகிறது.
நேற்று இலங்கை வேந்தன் கல்லூரியில் நடந்த கூட்டத்திற்கு முன்னதாக, கரவெட்டியில் இரண்டு கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. புலவாஓடை, கரவெட்டியில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களில் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்துகொள்ளவிருந்தனர். எனினும், கட்சி தலைமைக்கு தெரியாமல்- கட்சி தலைமைக்கு சவால் விடுத்து சுமந்திரன், சாணக்கியன் தரப்பு செயற்படுவதாக தகவல் வெளியானதையடுத்து- அந்த கூட்டங்களை பிரதேச ஏற்பாட்டாளர்கள் செய்ய மறுத்து விட்டனர். இதனால், இறுதி நேரத்தில் கூட்டங்கள் இரத்து செய்யப்பட்டன.
இதேவேளை, இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நடந்த கூட்டத்தில் சி.சிறிதரன் எம்.பி கலந்துகொள்வதை தவிர்த்துக் கொண்டார். கட்சி தலைமைக்கு தெரியாமல் நடக்கும் கூட்டங்களில் தன்னால் கலந்து கொள்ள முடியாதென அவர் மறுத்து விட்டார்.
இதேவேளை, கட்சி தலைமைக்கு எதிரான நடவடிக்கைகளிற்கு துணைபோவதாக இரா.சாணக்கியனிற்கு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. கட்சியின் கிழக்கு பிரதிநிதிகள் பலர், ஆதரவாளர்கள் பலர் தொலைபேசி வழியாக இரா.சாணக்கியனிற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டிருப்பு அமைப்பாளராக- மஹிந்த தரப்பின் செல்லப்பிள்ளையாக இருந்த சாணக்கியனை தமிழ் அரசு கட்சிக்கு கொண்டு வருவதில் மாவை சேனாதிராசாவின் முக்கிய பங்களிப்பும் இருந்தது. எனினும், தேர்தலின் பின்னர் வடக்கிற்கு வந்த சாண்க்கியன் 3 நாட்களாக வடக்கில் தங்கியிருந்தும், கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவை சந்திக்கவில்லை.
நேற்றைய கூட்ட சர்ச்சை கிளம்பியதை தொடர்ந்து இன்று (22) திடீரென மாவை சேனாதிராசாவை சந்திக்கும் முயற்சியில் சாணக்கியன் இறங்கியுள்ளதாக அறிய முடிகிறது.