ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணை இன்று (22) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
பெரும்பாலும் பிரேரணை மீதான வாக்கெடுப்பும் இன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற தலைப்பிலான இந்த யோசனையை, பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மொன்டிநீக்ரோ, மலாவி, வடக்கு மசிடோனியா ஆகிய இணை அனுசரணை நாடுகள் இந்த பிரேரணையை சமர்ப்பித்திருந்தன.
யுத்தத்தின் தீங்கு விளைவிக்கும் மரபுகளை நிவர்த்தி செய்வது நாட்டில் நிலையான அமைதியைக் கட்டியெழுப்புவது, பொறுப்புக்்கூறல் உள்ளிட்டவற்றை .ணை அனுசரணை நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்புதல், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தல் ஆகியவற்றில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முன்னேற்றத்தை அங்கீகரித்து வரவேற்ற இணை அனுசரணை நாடுகள், நல்லிணக்கத்தை நோக்கி நகர்வு மற்றும் பொறுப்புக்கூறலில் இலங்கையின் போதாமையை சுட்டிக்காட்டியுளளன.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர், அமர்வின் ஆரம்பத்தில் இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து வெளியிட்ட காட்டமான அறிக்கையை அங்கீகரித்திருந்தன.
எனினும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன பதிலளித்தபோது, இணை அனுசரணை நாடுகளால் இலங்கையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கங்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை, உண்மைகளை மறைத்து அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும், தீர்மானத்தை நிராகரிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், இலங்கை தொடர்பான வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக பாகிஸ்தான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. எனினும் இந்தியா மதில் மேல் பூனையாக இருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் 193 நாடுகளில் 47 நாடுகள் இந்த ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் வாக்களிக்க தகுதியுடையவை.