ஆபிரிக்க நாடான தான்சானியாவில் முதல் பெண் ஜனாதிபதி பதவியேற்றுள்ளார்.
2015ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டு ஜனாதிபதியாக பதவிவகித்த ஜோன் மாகுபுலி (61) உயிரிழந்ததை தொடர்ந்து, புதிய ஜனாதிபதி பதவியேற்றுள்ளார்.
ஜோன் மாகுபுலி கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானதாக வதந்திகள் பரவி வந்த நிலையில் இருதய நோய் காரணமாக கடந்த புதன்கிழமை உயிரிழந்தார்.
தான்சானியா நாட்டின் அரசியல் சாசனத்தின்படி, பதவியில் இருக்கும்போது ஜனாதிபதி இறந்துவிட்டால் துணை ஜனாதிபதி, ஜனாதிபதி பதவியை ஏற்பார்.
அதன்படி அந்த நாட்டின் துணை ஜனாதிபதியான சமியா சுலுகு ஹசன், நேற்று தான்சானியாவின் 6வது ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.
இதன் மூலம் தான்சானியாவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
டார் எஸ் சலாம் நகரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சமியா சுலுகு ஹசன், ஹிஜாப் ஆடையில் ஒரு கையில் குரானை வைத்துக்கொண்டு, நாட்டின் அரசியல் அமைப்பை பாதுகாப்பேன் என்று உறுதியளித்து பதவியேற்று கொண்டார்.
பதவியேற்பு விழாவில் தான்சானியாவின் தலைமை நீதிபதி, அமைச்சர்கள் மற்றும் அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
பதவியேற்பை தொடர்ந்து ஜனாதிபதி சமியா சுலுகு ஹசன், இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.