ஜெயலலிதா நினைவில்லத்தை நிர்வகிக்க அறக்கட்டளை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்து ஜெ.தீபா தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை அவரது நினைவில்லமாக மாற்றும் வகையில், தமிழ்நாடு புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தை எதிர்த்து தீபக் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் நிலுவையில் உள்ள நிலையில், அவரது சகோதரி தீபா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கெனவே இந்தச் சட்டத்தை எதிர்த்து தீபக் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தீபாவின் மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தீபக் தாக்கல் செய்த வழக்குடன் சேர்த்துப் பட்டியலிட உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தனர்.