சாணக்கியனின் வெற்றிக்கு தங்களை அர்ப்பணித்து செயற்பட்ட களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த பிரதி நிதிகள் பலர் இன்று பிள்ளையானின் கட்சியில் உத்தியோக பூர்வமாக இணைத்து கொண்டதுடன் இனிவரும் தேர்தல்களில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு பாடுபடுவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
குறித்த சந்திப்பானது மட்டக்களப்பில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி காரியாலயத்தில் நடை பெற்றது.
குறித்த சந்திப்பில் கலந்து கொண்ட பிரதி நிதியொருவர் கருத்துத் தெரிவிக்கையில்-
நாங்கள் களுவாஞ்சிகுடி கிராமத்தின் நன்மை கருதி பாராளுமன்ற பிரதிநிதி ஒருவர் தேவை எனும் நோக்கில் சாணக்கியனின் வெற்றிக்கு இரவுபகலாக அயராது பாடுபாட்டோம். ஆனால் அவர் வென்ற பிற்பாடு எமது கிராமத்திற்கு தேவையான விடயங்கள் தொடர்பில் பல தரப்பட்டகோரிக்கைகளை முன்வைத்தோம். ஆனால் செவிசாய்ப்பதாக இல்லை. அவர் அதனை உதாசீனம் செய்து வருகின்றார்.
இவ்வாறு அவரின் செயற்பாடு எங்களை ஓரங்கட்டுவதாகவே அமைந்துள்ளது. உரிமையுடன் கூடிய அபிவிருத்தி எனும் கோசத்துடன் தேர்தலில் புறப்பட்ட இவர் அனைத்தையும் மறந்து செயற்படுவதாகவே நாங்கள் உணர்கின்றோம். மாறாக இவரின் வெற்றிக்காக நாங்கள் பாட்ட பாடுகள் அனைத்தும் விளலுக்கிறைத்த நீராகியுள்ளது.
எமது கிராமத்தின் எழுச்சிக்காக செய்யவேண்டிய வேலைகள் ஏராளம் இருக்கின்றது. ஆகவே எமது கிராமத்தின் எதிர்கால முன்னேற்றம் கருதி மாற்று வழியை நாடவேண்டிய சந்தர்ப்பத்தை இவர் எமக்கு ஏற்படுத்தியதன் காரணமாக இந்த முடிவுக்கு வந்துள்ளோம் என அவர் இதன் போது தெரிவித்தார்.