கொழும்புக்கு கடந்த 09ம் திகதி கூலி வேலைக்குச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ள திருகோணமலை , பூநகர் – ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த நபரை மீட்டுத்தருமாறு அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த நபரிடமிருந்து 13ஆம் திகதி மாலைக்குப் பின்னர் எந்த தொடர்பும் கிடைக்கவில்லை என அவரது மனைவி தெரிவித்துள்ளார். இவ்வாறு காணாமல் போனவர் 1991.11.15 ஆம் திகதி பிறந்ததாகவும், 6 மற்றும் 1 1/2 வயதுகளையுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான துரைசிங்கம் சஹிந்தன் எனும் இளம் குடும்பஸ்தர் ஆவார்.
இவர் குடும்ப கஷ்ட நிலமை காரணமாக கொழும்புக்கு கூலி வேலைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் அவர் அங்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு- குருந்துவத்த பொலிஸில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக சேருநுவர பொலிஸார் தன்னிடம் தெரிவித்ததாக மனைவி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மனநலம் பாதிக்கப்பட்ட தனது கணவரை வைத்தியசாலையிலோ அல்லது, சேருநுவர பொலிஸிற்கோ , தனக்கோ அறிவிக்காமல் அவரை குருந்துவத்த பொலிஸார் திருப்பி அனுப்பியது கவலையளிப்பதாகவும் கூறியுள்ளார்.
தனது கணவர் இதற்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்ல எனவும், 13ஆம் திகதி காலை தன்னிடம் நன்றாகவே பேசியதாகவும் மனைவி குறிப்பிட்டுள்ளார்.
தனது இரண்டு பிள்ளைகளும் அப்பா எப்போது வருவார் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது எனது கணவரை மீட்டுத்தர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.