அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கப் போவதில்லை காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்
ஜனாதிபதியின் அறிவிப்புக்கு அமைவாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
உறவினர்களை தான் சந்திக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
தெரிவித்துள்ளார். ஆனால் நாம் அவரை ஒரு போதும் சந்திக்கப் போவதில்லை. அவரை
சந்திக்கும் விருப்பமும் இல்லை என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி யோ.கனகரஞ்சினி
தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை வரும் சனிக்கிழமை சந்தித்து, அவர்களின் பிரச்சனையை தீர்க்கும் வேலைத்திட்டமொன்றுடன் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி யோ.கனகரஞ்சினி தெரிவிக்கையில்,
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் உறவினர்கள்
காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும்
பொறுப்புக் கூற வேண்டும் என தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.
தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போதே எங்கள் உறவுக்ள அதிகம் காணாமல் ஆக்கப்பட்டனர். அந்த மகிந்த ராஜபக்ஸ அரசின்
காலத்திலும் காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கு அரசோ அவ்வரசில்
அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவினாலோ எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
மாறாக தங்கள் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தாவின் ஈபிடிபியும் காரணம் எனத் தெரிவித்த தாய்மார்களை நீதி
மன்றில் நிறுத்தப் போவதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்
நாம் அவரை எப்படி சந்திக்க முடியும்? அவ்வாறு சந்தித்ததாலும்
அமைச்சரால் எங்களுக்கு காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் தொடர்பில் என்ன
நியாயத்தை பெற்றுத் தரமுடியும்?
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இலங்கை அரசினால் நீதி
கிடைக்கும் என்ற நம்பிகை அற்றுப் போய்விட்டது. இந்த நிலையில் அந்த அரசின்
பிரதிநிதியாக உள்ள அமைச்சரை சந்திப்பதில் பயனில்லை. சர்வதேசமே
எமக்கான நீதியை பெற்றுத் தர வேண்டும்.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்
சங்கத்தின் சார்பாக நாம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திப்பதற்கு
தயாரில்லை என்பதனை உறுதியாக தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.